தமிழகத்தில் மின்னுற்பத்தி பாதிக்கப்படும் அபாயம்; அனல்மின் நிலையங்களில் நிலக்கரி தட்டுப்பாடு: 4 நாட்களுக்கு கையிருப்பில் உள்ளதாக அமைச்சர் விளக்கம்

தமிழகத்தில் மின்னுற்பத்தி பாதிக்கப்படும் அபாயம்; அனல்மின் நிலையங்களில் நிலக்கரி தட்டுப்பாடு: 4 நாட்களுக்கு கையிருப்பில் உள்ளதாக அமைச்சர் விளக்கம்
Updated on
1 min read

தமிழக அனல்மின் நிலையங்களில் நிலக்கரிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், மின்னுற்பத்தி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், இதை தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மறுத்துள்ளார். 4 நாட்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக, இந்தியாவிலும் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், நிலக்கரி விநியோகம் குறைந்துள்ளது. தமிழகத்தில் கையிருப்பில் உள்ள நிலக்கரி மூலம் அடுத்த 4 நாட்களுக்கு மட்டுமே மின்னுற்பத்தி செய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் மின்வாரியத்துக்கு சொந்தமான வல்லூர் அனல்மின் நிலையத்தில் நிலக்கரி சுத்தமாக கையிருப்பில் இல்லை. மற்ற நிலையங்களிலும் அதிகபட்சமாக 5 நாட்களுக்கு தேவையான நிலக்கரியே உள்ளது. தமிழகத்தின் மொத்த நிலக்கரி தேவை 23 லட்சம் டன்.தற்போது 2.63 லட்சம் டன் மட்டுமேஉள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, தலைமைச் செயலகத்தில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்றுகூறியதாவது:

தமிழகத்தின் மொத்த மின்தேவையில் 41 சதவீதம் அனல்மின்நிலையங்களில் இருந்து கிடைக்கிறது. தமிழகத்தில் மின்னுற்பத்திக்கான நிலக்கரிக்கு தட்டுப்பாடு இல்லை. நிலக்கரி சுரங்கங்களை ஒட்டிய மாநிலம் என்ற அடிப்படையில், மாநிலத்துக்கு 6 நாள் இருப்பு வைத்துக்கொள்ள மத்திய அரசு அனுமதித்துள்ளது. அதன்படி, தற்போது 4 நாட்களுக்கு நிலக்கரி கையிருப்பு உள்ளது. தமிழகத்தில் ஒரு நாளுக்கு 56 ஆயிரம் டன் நிலக்கரி தேவை. தினமும் 60 ஆயிரம் டன் நிலக்கரி வரத்து உள்ளது. அதன்படி, 4 நாட்களுக்கான கையிருப்பாக2.40 லட்சம் டன் நிலக்கரி உள்ளது.

தமிழக அரசின் சொந்த உற்பத்தி 1,800 மெகாவாட். தனியார் அனல்மின் நிலையங்களில் இருந்து 2,830மெகாவாட் பெறப்பட்டு வந்தது. நிலக்கரி விலை உயர்வு, மழைக்கால நிலக்கரி வரத்து குறைவால்தனியார் அனல்மின் உற்பத்தியாளர்கள் தற்போது 1,300 மெகாவாட்மின்சாரம்தான் அரசுக்கு வழங்குகின்றனர். பற்றாக்குறையான 1,500மெகாவாட் மின்சாரம் தமிழக அரசின் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து பெறப்படுகிறது.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in