Published : 12 Oct 2021 03:13 AM
Last Updated : 12 Oct 2021 03:13 AM

9 மாவட்டங்களில் இரு கட்டங்களாக நடந்த உள்ளாட்சித் தேர்தல்; 74 மையங்களில் இன்று வாக்கு எண்ணிக்கை: பலத்த போலீஸ் பாதுகாப்பு; பிற்பகலில் இருந்து முடிவுகள் தெரியவரும்

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் 2 கட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி, 74 மையங்களில் இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. அதற்காக அங்கு பலத்தபோலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிற்பகலில் இருந்து முடிவுகள் தெரியவரும்.

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் மற்றும் இதர 28 மாவட்டங்களில் காலியாக உள்ள 130 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத் தேர்தல் ஆகியவற்றை மாநில தேர்தல் ஆணையம் கடந்த செப்.13-ம் தேதி அறிவித்தது. மொத்தம் 27,791 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற இருந்தது.

3,346 பதவிகளுக்கான வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில் 24,416 பதவிகளுக்கு 80,819 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 76 லட்சத்து 60 ஆயிரம் பேர் வாக்காளர்களாவர்.

கடந்த 6-ம் தேதி 9 மாவட்டங்களில் உள்ள 39 ஒன்றியங்களில் 7,921 வாக்குச்சாவடிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் மொத்தம் 77.43 சதவீதம் வாக்குகள் பதிவாயின. 2-ம் கட்ட வாக்குப்பதிவில் மொத்தம் 78.47 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இதுதவிர 28 மாவட்டங்களில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கும் நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்றது. அதில் 70.51 சதவீத வாக்குகள் பதிவாகின.

இரு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இடம்பெற்ற வாக்குப் பெட்டிகள் 74 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அங்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் மையங்களில் முகவர்கள் மற்றும் வேட்பாளர்கள் வரும் வழிகள், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சிமன்றத் தலைவர், ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் என வாக்குகளை வகை பிரிக்கும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த அறைகளில்போதிய பாதுகாப்பு தடுப்பு வேலிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

ஒலிபெருக்கி வசதிகள்

வாக்கு எண்ணிக்கை விவரங்களை தெரிவிக்க ஒலிபெருக்கி வசதியும் மையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மழையால் வாக்கு எண்ணிக்கை தடைபடாமல் இருக்க போதிய ஏற்பாடுகளை செய்யுமாறு தேர்தல் அலுவலர்களுக்கு மாநிலதேர்தல் ஆணையம் அறிவுறுத்திஉள்ளது.

வாக்கு எண்ணும் மையங்களுக்கு, அலுவலர்கள் காலை 6.30மணிக்குள் வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. காலை 7.30 மணி அளவில் முதல் சுற்றுக்கான வேட்பாளர்கள், முகவர்கள், போலீஸார் பரிசோதனைக்கு பிறகு, மையத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

இதற்கிடையே, வாக்கு எண்ணிக்கையை அமைதியாக நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் சார்பில் மாவட்ட தேர்தல் பார்வையாளர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோர் உடனான ஆலோசனைக் கூட்டம் இணைய வழியில், சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

அதில் மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் பேசியபோது, ‘‘வாக்கு எண்ணும் மையத்தில் அடையாள அட்டை இன்றியாரும் இருக்கக் கூடாது. ஒவ்வொரு தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிந்ததும், உடனுக்குடன் தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும்’’ என்றார்.

இக்கூட்டத்தில் ஆணைய செயலர் எ.சுந்தரவல்லி, கூடுதல் காவல்துறை இயக்குநர் ஜெ.வெங்கட்ராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வாக்கு எண்ணும் மையங்கள் மற்றும் மையங்களுக்கு வெளியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிசிவிடி கேமராக்களும் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளன. வெப் ஸ்ட்ரீமிங்முறையில், அனைத்து மையங்களிலும் நடைபெறும் வாக்கு எண்ணிக்கை நிகழ்வுகளை தலைமையிடத்தில் இருந்து கண்காணிக்கவும் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x