Published : 12 Oct 2021 03:13 AM
Last Updated : 12 Oct 2021 03:13 AM

தமிழில் சுற்றுச்சூழல் அறிவிக்கை வெளியீடு: பொதுமக்கள் கருத்துகளை டிச.7-ம் தேதி வரை தெரிவிக்கலாம்

மத்திய அரசின் வரைவு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை தற்போது தமிழில் வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான கருத்துகள், ஆட்சேபனைகளை பொதுமக்கள் டிச.7-ம் தேதிக்குள் தெரிவிக்கலாம்.

நாட்டில் பெருநிறுவனங்கள், தொழிற்சாலைகளை நிறுவுவது, அவற்றை விரிவாக்கம் செய்வது,துறைமுகங்கள் மற்றும் சாலைகள்அமைப்பது போன்ற வளர்ச்சி திட்டங்கள், பெரிய அடுக்குமாடி குடியிருப்பு வளாக திட்டங்களை செயல்படுத்துவது போன்றவற்றை மேற்கொள்ள சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும்.

அதற்கு, இத்திட்டங்களை மேற்கொள்வதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு, அதை சரிசெய்ய எடுக்க உள்ள நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு செய்து ஒரு அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு அளிக்க வேண்டும். அது சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வறிக்கை எனப்படுகிறது.

இதுதொடர்பான வரைவு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கையை கடந்த ஆண்டு மார்ச் மாதம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டிருந்தது. அது இந்தி, ஆங்கிலத்தில் மட்டும் கிடைத்தது. அப்போது தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மாநில மொழிகளிலும் வெளியிட வேண்டும் என்று கோரிக்கைகள் விடுக்கப்பட்டது. இதுதொடர்பானவழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம், 22 மாநில மொழிகளில் வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில், சில நாட்களுக்கு முன்பு 22 மொழிகளில் அறிவிக்கை http://environmentclearance.nic.in/என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதில் தமிழ் எனஉள்ள பகுதியை கிளிக் செய்தால்,இந்தியில்தான் அறிவிக்கை வந்தது. இதுதொடர்பாக தமிழகத்தில் இருந்து பலர் புகார் தெரிவித்திருந்த நிலையில், பின்னர் தமிழில் வெளியிடப்பட்டது.

இந்த வரைவு அறிவிக்கையில்,‘சில திட்டங்களை தொடங்கியபிறகு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வறிக்கையை தாக்கல் செய்யலாம். கட்டுமானம் மற்றும்தேசிய நெடுஞ்சாலை மற்றும் நீர்வழி திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. ஒரு திட்டம் தொடர்பாக மக்கள் கருத்து தெரிவிக்கும் கால அவகாசம் 30 நாட்களில் இருந்து 20 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. 20 ஆயிரம் சதுர மீட்டருக்கு பதிலாக, 1.50 லட்சம் சதுர மீட்டருக்கு மேல் பணிகள் மேற்கொண்டால் சுற்றுச்சூழல் அனுமதிபெற வேண்டும். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த, பாதுகாப்பு சார்ந்த திட்டங்களுக்கு மக்களிடம் கருத்து கேட்க தேவையில்லை’ என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

இதையடுத்து, இந்த அறிவிக்கையின் சாதக, பாதகங்களை ஆய்வு செய்ய சுற்றுச்சூழல் துறைசெயலர் தலைமையில் 12 பேர்குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த வரைவு அறிவிக்கை தொடர்பான கருத்துகள், ஆட்சேபங்களை eia2020-oefcc@gov.inஎன்ற மின்னஞ்சலுக்கு டிசம்பர் 7-ம் தேதிக்குள் அனுப்பலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x