

தமிழக மின்தொகுப்புக்கு மின்சாரம் பெற வேண்டி சத்தீஸ்கர் மாநிலத்தின் ரெய்காரில் இருந்துதமிழகத்தில் பல மாவட்டங்கள் வழியாக மின் கோபுரங்கள் அமைக்கப்படுகின்றன. இந்தப் பணிகள் மத்திய அரசின் பவர் கிரிட் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தினால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மின்கோபுரங்கள் அமைக்கப்படும் இடங்களில், நிலத்தின் உரிமையாளருக்கு நிலத்தின் தொகையில் 85% வழங்கப்படும் என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மின்கம்பிகள் எந்தஇடங்களின் வழியே செல்கிறதோ, அந்த இடங்களின் உரிமையாளர்களுக்கு, நிலத்தின் மதிப்பில் 15% இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே கலிங்கமலை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மணி என்பவர் நேற்று முன்தினம் தனது நிலத்தில் அமைக்கப்பட்ட மின் கோபுரத்துக்கு உரிய இழப்பீடு வழங்காததால், தனது நிலத்தில் உள்ள மின்கோபுரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வளத்தி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து அக்கிராம மக்கள்சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் வருவாய் துறையினரின் பேச்சுவார்த்தைக்கு பின்பு சாலை மறியலை விலக்கிக் கொண்டனர்.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகி வெங்கடேசனிடம் கேட்டபோது, “விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை என்று கடந்த ஜூலையில் அரசுக்கு மனு அளித்தோம். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அரசின் அலட்சியத்தால் விவசாயி மணி தற்கொலை செய்து கொண்டார்” என்றார்.
இதுகுறித்து செஞ்சி எம்எல்ஏவும், அமைச்சருமான கே.எஸ்.மஸ்தானிடம் கேட்டபோது, “உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் முதலில் நிறுவனம் நிர்ணயித்த தொகையை பெற்றுக் கொண்டு, மேல்முறையீடு செய்து உரிய இழப்பீடை பெற்றுக் கொள்ள முடியும். இறந்த விவசாயி குடும்பத்துக்கு உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.