

கடந்த இரு ஆண்டுகளாக சீரானவர்த்தகம் இல்லாத நிலையில், கோவை மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயரும் வாய்ப்புள்ளதால், ஆர்டர்களை எதிர்பார்த்து சிறு, குறு மோட்டார் பம்ப்செட் உற்பத்தியாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
கோவையில் மோட்டார் பம்ப்செட், அவற்றுக்கான உதிரிபாகங்கள் உற்பத்தி சார்ந்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் நேரடி ஆர்டர் பெறும் சிறு, குறு நிறுவனங்கள் என்ற அடிப்படையில் மட்டும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்களும், இத்துறை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் என 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்களும் உள்ளனர். கோவையில் அரை ஹெச்.பி. முதல் 500 ஹெச்.பி. வரையிலான பம்ப்செட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. கரோனா பரவலின்போது அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, உற்பத்தி நிறுத்தம், மூலப்பொருட்கள் விலை உயர்வு போன்ற காரணங்களால் மோட்டார் பம்ப்செட் உற்பத்தி சார்ந்த சிறு, குறு நிறுவனங்கள் ஆர்டர்கள் இல்லாமல் தவித்து வந்தன.
இதுகுறித்து கோவை பம்ப்செட்மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பா ளர் சங்க (கோப்மா) தலைவர் கே.மணிராஜ் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறியதாவது:
கடந்த 2 ஆண்டுகளாகவே கோவையில் மோட்டார் பம்ப்செட் வர்த்தகம் பெரிய அளவில் இல்லை. கரோனா ஒரு பக்கம் எங்களது தொழிலை பாதித்தது என்றால், மறுபக்கம் மூலப்பொருட்கள் விலை உயர்வு கடுமையாக பாதிக்க செய்துள்ளது.
பிரபல நிறுவனங்கள் தயாரிக்கும் பம்ப்செட்டின் விலையை போலவே, வளர்ந்துவரும் நிறுவனங்களின் பம்ப்செட்களையும் விற்கும் சூழல் ஏற்பட்டுவிட்டது. இதனால் பம்ப்செட் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பெரிய நிறுவனங்கள் பெரிதாக பாதிக்கப்படவில்லை. எங்களைப் போன்ற சிறு, குறு உற்பத்தியாளர்களுக்கே பெரும் பிரச்சினை. சிறு, குறு நிறுவனங்களை சார்ந்தே அதிக தொழிலாளர்கள் உள்ளனர். எனவே, சிறு, குறு நிறுவனங்கள் சீராக இயங்கினால்தான் பெரும்பான்மையான தொழிலாளர்களும் பயன் பெறுவர்.
தற்போது, பெய்துவரும் மழையால் நிலத்தடி நீர் மட்டம் உயரும். அதோடு விவசாய பணிகளையும் மழைக்கு பிறகு விவசாயிகள் தொடங்குவார்கள். மேலும் பழைய மோட்டார் பம்ப்செட்களை மாற்றி விட்டு புதிய மோட்டார் பம்ப்செட்களை அமைப்பார்கள். இதனால் எங்களைப் போன்ற சிறு, குறு நிறுவனங்களுக்கு மாநிலம் முழுவதும் இருந்து ஆர்டர்கள் வரத் தொடங்கும். மழைக் காலம் முடிந்து வெயில் அடிக்கத் தொடங்கும்போது இப்பணிகள் தொடங்கும்.
அதோடு, தை மாதம் முதல் புதிய வீடுகளுக்கான கட்டுமானப் பணிகள் அதிகமாக தொடங்க வாய்ப்புள்ளது. இதனால் புதிய ஆழ்குழாய் கிணறுகள் அமைத்தல் போன்றவையும் அதிகமாக நடக்கும். எங்களுக்கான சீஸன் வரும் நவம்பர் 15-ம் தேதிக்குப் பிறகு தொடங்கும் என எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.