

மழைக்காலம் தொடங்கியுள் ளதால் டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க ஒவ்வொரு பகுதியையும் தூய்மையாக வைத்திருக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து திட்டக்குடி சட்டப்பேரவை உறுப்பினரான, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் திட்டக்குடி நகராட்சி தூய்மை பணியாளர்கள், நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் மற்றும் திமுக தொண்டர்களைக் கொண்டு திட்டக்குடி பேருந்து நிலையத்திலிருந்து, வட்டாட்சியர் அலுவலகம் வரை சாலையில் உள்ள குப்பைகளை நேற்று அகற்றியதோடு, வாய்க்கால்களில் உள்ளஅடைப்புகளையும் அகற்றினார்.
மேலும் நெடுஞ்சாலைத் துறையினரைக் கொண்டு சாலையோரம் குவிந்திருந்த மண்களை அகற்றியதோடு, சாலையோரம் முளைத்திருந்த முட்புதர்களையும் அகற்றச் செய்ததோடு, தானும் அவர்களுடன் சேர்ந்து புதர்களை மண்வெட்டியால் வெட்டியும் மண்ணை சுமந்தும் அமைச்சர் சி.வெ.கணேசன் சுத்தம் செய்தார்.
தூய்மைப் பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் மற்றும்நெடுஞ்சாலைப் பணியாளர்களுக்கு காலை உணவளித்து அவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார். இந்த தூய்மைப் பணிகள் இன்று பெண்ணாடத்திலும், அதையடுத்து விருத்தாசலம், பண்ருட்டி, நெல்லிக்குப்பம் பகுதிகளிலும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் சி.வெ.கணேசன் தெரிவித்தார்.