

மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமானவரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படாதது ஏமாற்றம் அளிக் கிறது என்று தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மத்திய பட்ஜெட் தொடர்பாக தமிழக அரசியல் கட்சித் தலைவர் கள் வெளியிட்டுள்ள கருத்துகள் வருமாறு:
விஜயகாந்த் (தேமுதிக தலைவர்):
வேளாண் பொருட்களுக்கு ஆன்லைன் சந்தை, இளைஞர் களுக்கு வேலைவாய்ப்பை பெருக்க திறன்மேம்பாட்டு மையங் கள், சிறு, குறு தொழில்முனை வோருக்கு ரூ.2 கோடி வருமானவரி விலக்கு போன்றவை பட்ஜெட்டின் வரவேற்கத்தக்க அம்சங்கள் ஆகும். ஆனால், நதிநீர் இணைப்பு திட்டம் குறித்து எந்த அறிவிப்பும் இல்லாதது கவலையளிக்கிறது. நடுத்தர வர்க்கத்தினர் பெரிதும் எதிர்பார்த்திருந்த வருமானவரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப் படாதது ஏமாற்றத்தை அளிக்கிறது.
டாக்டர் ராமதாஸ் (பாமக நிறுவனர்):
தனிநபர் வருமானவரி விலக்கு உச்சவரம்பு அதிகரிக் கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. கல்வி, சுகாதாரம், வேளாண்மை, ஊரக வளர்ச்சிக்கு அதிக முன்னுரிமை அளித்திருப்பது வரவேற்கத்தக்கது. வேளாண் பொருட்களுக்கு ஆன்லைன் கொள்முதல் வசதி ஆகியவை வேளாண்துறை வளர்ச்சிக்கு நிச்சயம் உதவும்.
வைகோ (மதிமுக பொதுச்செய லாளர்):
தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப் படாததால், மாதச்சம்பளம் பெறும் ஊழியர்கள் ஏமாற்றம் அடைந் துள்ளனர். மோட்டார் வாகன சட்டத் தில் திருத்தம் கொண்டுவர உத் தேசித்திருப்பது ஏற்கக் கூடியதல்ல. கிராமப்புற மூத்த குடிமக்களுக்கு காப்பீடு, எஸ்சி, எஸ்டி தொழில் முனைவோருக்கு தேசிய மையம், சிறுநீரக டயாலிசிஸ் இயந்திரங்க ளுக்கு உற்பத்தி வரி நீக்கம், நில ஆவணங்களை மின்னணுமயமாக் கல் போன்ற சில திட்டங்கள் வர வேற்கத்தக்கவை. எனினும், மத்திய வரவு-செலவு அறிக்கை மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை.
தமிழிசை சவுந்தரராஜன் (தமிழ் நாடு பாஜக தலைவர்):
வீடு கட்டுவதற்கு சலுகை அளித் திருப்பது நடுத்தர குடும்பங்களுக்கு மகிழ்ச்சி தரும். 5 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு சமையல் கியாஸ் வழங்கப்படும் என்ற அறிவிப்பு தாய்மார்களின் வயிற்றில் பால் வார்க்கும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ் வசதி, மலிவு விலை மருந்துக்கடைகள் போன்றவை மத்திய அரசின் தாய்மையுடன் கூடிய அணுகுமுறையை காட்டுகிறது.
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் (தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர்):
தொழில் உற்பத்தியையோ, விவசாய வளர்ச்சியையோ ஏற்படுத்த எந்த வகையிலும் உதவாத பட்ஜெட் இது. விவசாயிகளுக்கு ஆதரவாகவோ, ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கோ எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது பாஜக அரசின் மக்கள் விரோதப் போக்கை மீண்டும் உறுதி செய்கிறது.
ஜி.ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செய லாளர்):
மக்கள் மீதான மறைமுக வரிகள் உயர்த்தப்பட்டுள்ளன. கல்வி, ஆரோக்கியம், குழந்தை மற்றும் மகளிர் நலன், ஆதி திராவிடர், பழங்குடியினர் நலன் ஆகியவை புறக்கணிக்கப் பட்டுள்ளன. பணக்காரர்களையும், பெரும் கம்பெனிகளையும் தொடர்ந்து மகிழ்விக்கும் வண்ணம் நேர்முகவரிகள் சுமை ஆயிரம் கோடி ரூபாயாக குறைக்கப் பட்டுள்ளது. நாட்டின் பெரும்பகுதி வரிவருமானம் மறைமுகவரிகள் மூலம் திரட்டப்படுவது உழைக் கும் மக்களை தொடர்ந்து வஞ்சிப் பதாகும். தாராளமய கொள்கை களை தீவிரமாக பின்பற்றும் பாஜக அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை வன்மையாக கண்டிக்கிறோம்.
இரா.முத்தரசன் (இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்):
வருமானவரி விதிப்புக்கான வருமான அளவு உயர்த்தப்படும் என எதிர்பார்த்தவர்கள் ஏமாற்றப் பட்டுள்ளனர். பெருந்தொழில் நிறு வனங்களுக்கு சலுகை அளிப்பது தொடர்கிறது. பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தொடர்ந்து வரி குறைக்கப்படுகின்றன. சாதாரண மக்கள் தலையில் சுமையேற்றும் மறைமுக வரிகள் உயர்த்தப்படு கின்றன. வேளாண் விளை பொருட் களையும், விவசாயத்தையும் ஆன்லைன் வியாபாரத்துக்குத் தள்ளிவிடுவது வேளாண்மை பொருளாதாரத்தை பன்னாட்டு நிறு வனங்களுக்கு அடிமைப் படுத்திவிடும்.
ஜி.கே.வாசன் (தமாகா தலைவர்):
விவசாயக் கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு இல்லாதது விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. தனிநபர் வருமான வரி உச்ச வரம்பு தற்போதைய ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும் என்று நடுத்தர மக்கள் எதிர்பார்த்த நிலையில், அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. மத்திய பட்ஜெட், எந்த தரப்பு மக்களின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்வதாக அமையவில்லை.
ஆர்.சரத்குமார் (அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர்):
மக்களின் நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் பூர்த்திசெய்து வளர்ச்சிக்கு வழிகோலும் பட்ஜெட்.
ஈஸ்வரன் (கொமதேக மாநில பொதுச் செயலாளர்):
இந்தியாவில் உற்பத்தியாகும் உணவுப்பொருட் களை ஏற்றுமதி செய்வதை ஊக்கு விக்க உணவுப் பொருட்களை சந்தைப்படுத்த 100 சதவீதம் அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி கொடுத்திருப்பது வரவேற்கத் தக்கது. ‘விவசாயிகள் வரு மானத்தை இரட்டிப்பு ஆக்குவேன்’ என்று பிரதமர் சொன்னதை உறுதிப்படுத்துகின்ற வகையில், இந்த ஒரே ஒரு அறிவிப்புதான் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப் பட்டிருக்கிறது. இதை விட்டு விவசாயத்துக்கான லாபகரமான அம்சங்கள் ஏதுமில்லை.
அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக நிறுவனர் டாக்டர் என்.சேதுராமன், இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன், பெருந் தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், இந்திய தேசிய முஸ்லிம் லீக் மாநில தலைவர் ஒய்.ஜவஹர் அலி, கொங்குநாடு ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர் G.K.நாகராஜ் ஆகியோரும் மத்திய பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.