

திருப்பத்தூர் மாவட்டத்தில் 5-ம் கட்டமாக நடத்தப்பட்ட கரோனா தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொண்ட 3 பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ஆட்சியர் அமர் குஷ்வாஹா 32 இன்ச் கலர் டிவியை பரிசாக இன்று மாலை வழங்கினார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட மாவட்டமாக கொண்டு வர மாவட்ட சுகாதாரத்துறை தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. 9.50 லட்சம் மக்கள் தொகையில் இதுவரை 6.40 லட்சம் நபர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், 5-ம் கட்ட கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் மாவட்டம் முழுவதும் 485 இடங்களில் நேற்று நடைபெற்றது. இம் முகாமில் கலந்து கொண்டு கரோனா தடுப்பூசி முதல் தவணை செலுத்திக்கொள்ளும் நபர்களில் 3 நபர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு 32 இன்ச் கலர் டிவி பரிசாக வழங்கப்படும் என ஆட்சியர் அமர் குஷ்வாஹா அறிவித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து, 5-ம் கட்ட சிறப்பு முகாமில் பொதுமக்கள் அதிக ஆர்வமுடன் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். குறிப்பாக திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆலங்காயம், ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவிலான பொதுமக்கள் கலந்து கொண்டு கரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டனர்.
5-ம் கட்ட முகாமில் ஒரே நாளில் 20 ஆயிரத்து 672 நபர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில், குலுக்கல் முறையில் 3 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி, புதூர்நாடு மலை கிராமம், நெல்லிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பாப்பாத்தி(42), வெலக்கல்நத்தம் அடுத்த ஏரியூர் பகுதியைச் சேர்ந்த பெருமாள் (44), ஆலங்காயம் ஒன்றியம், விஜிலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்செல்வி (38) ஆகிய 3 பேர் 32 இன்ச் டிவி பெறும் அதிர்ஷ்டசாலியாக தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வு செய்யப்பட்ட 3 பேரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு இன்று மாலை வரவழைக்கப்பட்டனர். அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா கலர் டிவியை பரிசாக வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து,கந்திலி அடுத்த ரகுபதியூர் கிராமத்தைச் சேர்ந்த மதி(49), மாதனூர் ஒன்றியம் ஜமீன் கிராமத்தைச் சேர்ந்த இந்துமதி(24), நாட்றாம்பள்ளி ஒன்றியம் வடக்குப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த புஷ்பா(50) ஆகியோருக்கு ஆறுதல் பரிசாக டிபன் கேரியர் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யாபாண்டியன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வில்சன்ராஜசேகர், மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் செந்தில், மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.