

தக்கலையில் காமராஜர் சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அணிவித்த மாலையை அகற்றி வீசியெறிந்த காங்கிரஸார், சிலையைக் கழுவி சுத்தப்படுத்திய பின்னர் பாலாபிஷேகம் செய்ததால் பரபரப்பு நிலவியது.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் நேற்று மாலையில் கனிமவளக் கடத்தலைக் கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சில தினங்களுக்கு முன்னரே காங்கிரஸ் கொள்கை எதிர்ப்பாளராக சீமானைக் கருதுவதால் அவர் தக்கலையில் நடத்தும் ஆர்ப்பாட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என காங்கிரஸார் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இது தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகளின் கண்டன உரைகள் சமூக வலைதளங்களில் உலா வந்தன. இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பிற்கு மத்தியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சீமான் பங்கேற்றார். தக்கலை வந்தபோது பேருந்து நிலையம் முன்புள்ள காமராஜர் சிலைக்கு சீமான் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
இந்நிலையில் நிகழ்ச்சி முடிந்து சீமான் சென்றதும், அங்கு தேசிய இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ் தலைமையில் திரண்ட ஹனுகுமார் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் காமராஜர் சிலை பீடத்தில் ஏறினர். சிலைக்கு சீமான் அணிவித்த மாலையை அகற்றி வீசி எறிந்தனர்.
பின்னர் சிலைக்குத் தண்ணீர் ஊற்றி, சிலையைச் சுத்தப்படுத்தினர். சீமான் மாலை அணிவித்ததால் சுத்தப்படுத்தி பாலாபிஷேகம் செய்கிறோம் என கோஷமிட்டவாறு காமராஜர் சிலைக்குப் பாலாபிஷேகம் செய்து மாலை அணிவித்தனர். இதனால் பரபரப்பு நிலவியது.