

மதுரை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இன்று பெண் ஒருவர், கணவரைக் கொலை செய்தவர்களைக் கண்டுபிடிக்க வலியுறுத்தி மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
அதே நேரத்தில் அங்கு காரில் வந்த ஆட்சியர், காரை விட்டு இறங்கி அவரைத் தடுத்து நிறுத்தி, அவரிடம் விசாரணை மேற்கொண்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் கரோனா தொற்றுக்குப் பிறகு வழக்கம் போல் திங்கட்கிழமை நடக்கும் குறைதீர் கூட்டம் நடக்கத் தொடங்கியது.
ஆட்சியர் வளாகத்தில் கடந்த வாரம் நடந்த ஒரு தற்கொலை முயற்சி சம்பவத்திற்குப் பிறகு அத்தகைய எண்ணத்துடன் உள்ளே வருபவர்களைக் கண்காணிக்க நுழைவு வாயிலில் தற்போது போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாதுகாப்பு வளையத்தையும் மீறி இன்று காலை பெண் ஒருவர் கையில் மண்ணெண்ணெய் கேனை மறைத்து எடுத்து உள்ளே நுழைந்துவிட்டார். அவர் திடீரென்று மண்ணெண்ணெய் கேனை எடுத்து உடலில் ஊற்றிக்கொள்ள முயன்றார். அப்போது அந்த வழியாக ஆட்சியர் அனீஸ் சேகர், காரில் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்க வந்து கொண்டிருந்தார். அவர் பெண் தீக்குளிக்க முயன்றதைப் பார்த்து உடனே காரை விட்டுக் கீழே இறங்கினார்.
மாவட்ட ஆட்சியர், அந்தப் பெண்ணின் அருகில் சென்று விசாரித்தார். போலீஸார் அந்தப் பெண்ணின் கையில் இருந்து மண்ணெண்ணெய் கேனைப் பறிமுதல் செய்தனர். ஆனால், அந்தப் பெண், ''என்னைச் சாக விடுங்கள்'' என்று கதறினார். ஆட்சியர் அந்தப் பெண்ணுடன் வந்தவர்களுடன் விசாரித்து அவரது கோரிக்கை தொடர்பான மனுவைப் பெற்று நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துச் சென்றார்.
இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் கூறுகையில், ''திருமோகூர் அம்மாபட்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான நாகராஜ் என்பவர் கடந்த மார்ச் 28ஆம் தேதி ஒத்தக்கடை வரைவாளர் நகர் என்ற பகுதியில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அவரது மனைவி பாக்கியா. தூய்மைப் பணியாளரான இவர் நேரில் சென்று கணவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால், அங்கு நாகராஜ் இறந்துவிட்டார். ஒத்தக்கடை போலீஸார் சந்தேக மரணம் என்ற அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
இதில் அதிருப்தியடைந்த பாக்கியா தனது கணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், தனது கணவரைக் கொலை செய்துள்ள நபர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்யக் கோரியும் ஒத்தக்கடை போலீஸ் நிலையத்தில் பல முறை புகார் செய்துள்ளார். ஆனால், போலீஸார் நடவடிக்கை எடுக்க அலட்சியம் காட்டுவதாக நேற்று ஆட்சியர் அலுவலகத்திற்குத் தீக்குளிக்க முயன்றுள்ளார்'' என்றார்.