

குடியாத்தம் அருகே ரயில் இன்ஜினில் இருந்து பயணிகள் பெட்டி தனியாக கழன்று ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரில் இருந்து அரக்கோணம் நோக்கி 17 பெட்டிகளுடன் பயணிகள் ரயில் ஒன்று செவ்வாய்க்கிழமை காலை புறப்பட்டது. இந்த ரயில் மாலை 4.30 மணியளவில் குடியாத்தம் அருகே உள்ள கூடநகரம் ரயில் நிலையம் அருகே வந்துகொண்டிருந்தது.
அப்போது, ரயில் இன்ஜின் மற்றும் அதனைத் தொடர்ந்து உள்ள 2 பெட்டியுடன் தனியாக கழன்றன. பெட்டிகளை இணைக்கும் இரும்பு கிளாம்புகள் உடைந்து வாக்யூம் பைப்புகள் அறுந்ததால் மீதம் இருந்த 15 பெட்டிகள் தனியாக கழன்று ஓடியது.
இன்ஜின் இல்லாமல் பெட்டிகள் மட்டும் தனியாக ஓடியதைப் பார்த்த பயணிகள் பலர் கூச்சலிட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக பயணிகள் இருந்த ரயில் பெட்டி சிறிது தூரத்தில் ஓடி நின்றது.
அதற்குள் 2 பெட்டிகளுடன் தனியாக சென்ற ரயில் இன்ஜின் குடியாத்தம் ரயில் நிலையத்தை அடைந்தது. இதுகுறித்த தகவலின்பேரில், குடியாத்தம் ரயில் நிலையத்தில் 2 பெட்டிகளுடன் வந்த ரயில் இன்ஜின் தனியாக நிறுத்தி வைக்கப்பட்டது.
மேலும், ஜோலார்பேட்டையில் இருந்து வரவழைக்கப்பட்ட ரயில் இன்ஜின் ஒன்று கூட நகரம் ரயில் நிலையம் அருகே நின்றுகொண்டிருந்த ரயில் பெட்டிகளின் பின்னால் இணைக்கப்பட்டது.
பின்னர், 15 பெட்டிகளும் மெதுவான வேகத்தில் முன்னோக்கி தள்ளப்பட்டு குடியாத்தம் ரயில் நிலையம் வரை கொண்டு செல்லப்பட்டன. அங்கு ஏற்கெனவே உள்ள மற்ற 2 ரயில் பெட்டிகளை இணைந்து அரக்கோணம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.