பச்சை நிறமாக மாறிய பாம்பன்: கடலில் செத்து மிதக்கும் டால்பின்கள்

பச்சையாக மாறியுள்ள பாம்பன் கடல்
பச்சையாக மாறியுள்ள பாம்பன் கடல்
Updated on
1 min read

பாம்பன் குந்துக்கால் கடற்கரை பகுதியில் பூங்கோரைப் பாசியால் கடல் நீரின் நிறம் பச்சையாக மாறிய நிலையில், அவற்றில் டால்பின் மீன்கள் இரண்டு இறந்து மிதப்பதால் மீனவர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

ராமேசுவரம் அருகே மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பாம்பன் முதல் கீழக்கரை வரை பச்சை நிறப் பூங்கோரைப் பாசிகள் நீரோட்டத்தில் அடித்து வரப்பட்டு கரை ஒதுங்கத் தொடங்கியுள்ளன. கடந்த இரண்டு நாட்களாக பாம்பன் குந்துக்கால் கடற்பகுதியில் கடல் நீர் பச்சை நிறத்தில் காணப்பட்ட நிலையில் திங்கட்கிழமை உயிரிழந்த நிலையில் இரண்டு டால்பின்கள் குந்துக்கால் பகுதியில் மிதந்து வந்தன.

மேலும் மன்னார் வளைகுடா கடற்பகுதியில் பாம்பனிலிருந்து கீழக்கரை வரையிலுமான பகுதியில் மீன்கள் உயிரிழந்த நிலையில் ஆயிரக்கணக்கான மீன்கள் மிதந்து வருவதாக மீனவர்கள் மீன்வளத்துறை, வனத்துறை மற்றும் மத்தியக் கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தைச் சார்ந்த அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

பாம்பன் குந்துக்கால் கடற்பகுதியில் இறந்த நிலையில் மிதந்து வரும் டால்பின் மீன்களில் ஒன்று.
பாம்பன் குந்துக்கால் கடற்பகுதியில் இறந்த நிலையில் மிதந்து வரும் டால்பின் மீன்களில் ஒன்று.

கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பரில் மன்னார் வளைகுடா பகுதியில் 'நாட்டிலுக்கா சின்டிலெம்ஸ்' என்றழைக்கப்படும் பூங்கோரைப் பாசிகள் பெருமளவில் படர்ந்தபோது மீன்களின் செதில்கள் அடைக்கப்பட்டு சுவாசிக்க முடியாமல் திணறி பல ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து மன்னார் வளைகுடா கடற்பகுதியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கின. இவற்றில் பெரும்பாலும் பாறைகளில் வசிக்கக்கூடிய சிறிய வகை மீன்களான ஓரா, கிளிஞ்சான், அஞ்சாலை ஆகிய மீன்களே அதிக அளவில் இறந்து கரை ஒதுங்கின.

ஆனால், தற்போது பாலுட்டி மீனினங்களான டால்பின் மீன்களும் இறந்து மிதந்து வருவது குறித்து மீனவர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in