Published : 11 Oct 2021 04:14 PM
Last Updated : 11 Oct 2021 04:14 PM

ஆவின் நிறுவனம் வியாபார நோக்கமின்றி பொதுமக்களுக்கு சேவை செய்கிறது: அமைச்சர் நாசர்

அமைச்சர் சா.மு.நாசர்: கோப்புப்படம்

சென்னை

ஆவின் நிறுவனம் வியாபார நோக்கமின்றி பொதுமக்களுக்கு சேவை செய்யும் உணர்வோடு செயலாற்றி வருகிறது என, பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அமைச்சர் சா.மு.நாசர் இன்று (அக். 11) சென்னையில் பேசியதாவது:

"தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சுவை மிகுந்த சிறப்பு இனிப்புகளான

1) காஜூ கட்லீ (250 கி.) - ரூ.225.00

2) நட்டி மில்க் கேக் (250 கி.) - ரூ.210.00

3) மோத்தி பாக் (250 கி.) - ரூ.170.00

4) காஜூ பிஸ்தா ரோல் (250 கி.) - ரூ.275.00

5) காபி மில்க் பர்பி (250 கி) -ரூ.210.00

மேற்கண்ட 5 வகையான இனிப்புகள் அடங்கிய தொகுப்பு (Combo Box) (500 கி.) - ரூ.425.00 ஆகிய தீபாவளி சிறப்பு இனிப்புகளை அறிமுகம் செய்து விற்பனையைத் தொடங்கி வைப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.

இன்றைய தினம் நம்முடைய ஆவின் நிறுவனத்தின் சார்பில் நம் பயன்பாட்டுக்குப் போக மீதம் இருக்கின்ற பாலை உபபொருட்களாக மாற்றி, இதுபோன்ற பண்டிகைக் காலங்களில் பொதுமக்களுக்கு சேவை செய்கின்ற உணர்வோடு, வியாபார நோக்கமின்றிப் பொதுநோக்கோடு, இதுபோன்ற உபபொருட்கள் தயாரித்து, அதை மக்களுடைய பயன்பாட்டுக்குத் தரவேண்டும் என்ற கொள்கை உணர்வோடு, இது ஒரு தொழில் முறை என்றாலும் முழுக்க முழுக்க மக்களுக்காகப் பொது நோக்கோடு செய்துவருகின்றோம்.

கடந்த ஆண்டு இனிப்பு வகைகளில் 15 டன் விற்பனை செய்திருக்கின்றோம். 1.2 கோடி ரூபாய் இதன் மூலம் கடந்த ஆண்டு லாபம் கிடைத்தது. இந்த ஆண்டு அதிக விற்பனை என்ற நோக்கத்தோடு 25 டன் இலக்கை நாம் வைத்திருக்கின்றோம். 2.2 கோடிக்கு இதை உயர்த்தவும் அதற்கான நடவடிக்கை துரிதமாக எடுக்கப்பட்டு வருகிறது.

அனைத்து மாவட்டங்களிலும் விற்பனையை அதிகரிக்கவும் மற்றும் அண்டை மாநிலங்களில், அதேபோன்று அண்டை நாடுகளுக்கும் நாம் ஏற்கெனவே ஒப்பந்தம் செய்திருந்த நாடுகளுக்கும் இந்தப் பொருட்களையெல்லாம் விற்பனை செய்யத் துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பொதுவாக ஹோட்டலில் வருபவர்களை நன்றாக வரவேற்பார்கள், இதைச் சாப்பிடுங்கள் அதைச் சாப்பிடுங்கள் என்று கடைசியில் பில்லைப் போடும்போது மிஞ்சுவர். இது வியாபார நோக்கம். ஆனால், ஆவின் வியாபார நோக்கமில்லை. ஆனால், தனியார் பால் கொள்முதல் விலை ரூ.25 முதல் ரூ.28 வரை எந்த அளவுக்கு வாங்க முடியுமோ அந்த அளவுக்கு வாங்குகின்றனர்.

ஆனால், நம்மைப் பொறுத்தவரை லிட்டருக்கு ரூ.32-க்கு வாங்குகிறோம். லிட்டருக்கு ரூ.32-க்கு வாங்குவதை 12 லிட்டர் பாலை பிராசஸ் செய்தால்தான் 1 கிலோ பால் பவுடர் கிடைக்கும். அதில், கூடுதலாக ஒரு லாபம் என்னவென்றால் 140 ரூபாய்க்கு வெண்ணெய் கிடைக்கும்.

நமக்கு ஏற்படக்கூடிய நஷ்டம் 34 ரூபாய். அவையின்றி, பிராசஸிங் காஸ்ட் சேர்த்தால் மொத்தமாக ரூ.40 நஷ்டம். இருந்தாலும், உற்பத்தி செய்கின்ற விவசாயிகள் கரோனா காலமாக இருந்தாலும் தன்னைத்தானே வருத்திக் கொண்டு வெயில் மழை பார்க்காமல் அந்தக் கால்நடைகளையும் பராமரித்துக் கொண்டும், விவசாயக் குடும்பத்தில் உள்ள அனைவரும் அந்தக் கால்நடைகளைப் பராமரித்துக் கொண்டும், பாலையும் கறந்து அந்தப் பால் மக்களுக்குச் சேர வேண்டும் என்று உழைத்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு கரோனா காலத்தில் தனியார் நிறுவனங்கள் ரூ.25-க்கு கொள்முதல் செய்தபோது நாங்கள் விவசாயிகள் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக, முதல்வரின் கட்டளைக்கிணங்க நாங்கள் வீடுகளுக்கே சென்று ரூ.32-க்கு கொள்முதல் செய்தது மட்டுமின்றி, அதை பிராசஸிங் செய்து பொதுமக்களுக்குத் தங்கு தடையின்றி கொடுத்த ஒரே நிறுவனம் ஆவின் நிறுவனம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்".

இவ்வாறு அமைச்சர் நாசர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x