Last Updated : 11 Oct, 2021 02:36 PM

 

Published : 11 Oct 2021 02:36 PM
Last Updated : 11 Oct 2021 02:36 PM

கொலை வழக்கு: திமுக எம்.பி. ரமேஷை இரு நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

கடலூர் எம்.பி. ரமேஷ்: கோப்புப்படம்

பண்ருட்டி

கொலை வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் சரணடைந்த திமுக எம்.பி. டி.ஆர்.வி.எஸ்.ரமேஷை இரு நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலூர் மக்களவைத் தொகுதி திமுக எம்.பி.யாக இருப்பவர் டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ். இவருக்குச் சொந்தமான முந்திரி தொழிற்சாலை, பண்ருட்டி அருகே பனிக்கன்குப்பத்தில் உள்ளது. இந்த தொழிற்சாலையில் மேலமாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராசு (55) என்பவர் வேலை பார்த்து வந்தார். கடந்த மாதம் 19-ம் தேதி கோவிந்தராசு மர்மமான முறையில் உயிரிழந்தார்.

அவரது இறப்புக்கு கடலூர் எம்.பி. ரமேஷ்தான் காரணம் எனக் கூறி, கோவிந்தராசுவின் உறவினர்களும், பாமகவினரும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக, காடாம்புலியூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, விசாரணையைத் தொடங்கிய சிபிசிஐடி போலீஸார், திமுக எம்.பி. ரமேஷ் மற்றும் அவரது உதவியாளர் நடராஜன் உள்ளிட்ட 6 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர்களில் ரமேஷ் தவிர 5 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். இதனால், எம்.பி.ரமேஷ் எந்நேரமும் கைது செய்யப்படலாம் எனக் கூறப்பட்டது.

இது தொடர்பாக, சென்னையில் உள்ள எம்.பி., ரமேஷிடம் சிபிசிஐடி பிரிவின் ஒரு குழுவினர் விசாரணை நடத்தியதாக நேற்று தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், இன்று (அக். 11) அவர் பண்ருட்டி சார்பு நீதிமன்ற நீதிமன்ற நடுவர் கற்பகவள்ளி முன்பு சரணடைந்தார்.

அவரை அக்டோபர் 13 மற்றும் 14 ஆகிய இரு நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதித்துறை நடுவர் கற்பகவள்ளி உத்தரவிட்டார். இதையடுத்து, அவர் கரோனா பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். பரிசோதனைக்குப் பின் கடலூர் கிளைச்சிறையில் அடைக்கப்படுவார். கரோனா பரிசோதனையின் முடிவின்படி, கடலூர் மத்திய சிறையில் அடைப்பது குறித்து சிபிசிஐடி போலீஸார் முடிவு செய்வர்.

இதனிடையே, எம்.பி. ரமேஷ் வெளியிட்ட அறிக்கையில், "என் மீது சுமத்தப்பட்டுள்ள புகார் ஆதாரமற்றது என்பதைச் சட்டத்தின் முன்பு உரிய ஆதாரங்களுடன் நிரூபிப்பேன்" எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x