உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ததைக் கண்டித்து புதுச்சேரியில் பந்த்: தனியார் பேருந்துகள் இயங்கவில்லை
உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ததைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் நடத்திய பந்த் போராட்டத்தால் தனியார் பேருந்துகள் இயங்கவில்லை. முக்கியக் கடைவீதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அதே நேரத்தில் பெரிய மார்க்கெட், உழவர் சந்தைகள் இயங்கின. பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கின. அரசியல் கட்சிகள் ஊர்வலத்தை நடத்தின.
புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக, பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கு இட ஒதுக்கீட்டை ரத்து செய்து உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் தலைமையில் அனைத்துக் கட்சி எம்எல்ஏக்கள் ஒன்றுகூடி பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு அளித்துத் தேர்தலை நடத்த வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றினர். அத்துடன் மாநிலத் தேர்தல் ஆணையர் ராய் பி தாமஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர்கள் வலியுறுத்திய தீர்மானங்களை ஆளுநர் தமிழிசையை நேரில் சந்தித்தும் வலியுறுத்தினர்.
எதிர்க்கட்சிகளான காங்கிரஸ்- திமுக கூட்டணிக் கட்சியினர் இட ஒதுக்கீட்டை ரத்து செய்து தேர்தலை நடத்துவதைக் கண்டித்து இன்று பந்த் போராட்டம் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிட்டனர். இதன்படி இன்று காலை 6 மணிக்கு பந்த் போராட்டம் தொடங்கியது. அதிகாலை முதல் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. அதே நேரத்தில் தமிழகம், புதுவை அரசுப் பேருந்துகள் இயங்கின. தமிழகத்திலிருந்து புதுவை வழியாகச் செல்லும் தமிழக அரசுப் பேருந்துகளும், புதுவையிலிருந்து இயக்கப்படும் தமிழக அரசுப் பேருந்துகளும் வழக்கம்போல் இயங்கின.
தனியார் பேருந்துகள் இயக்கப்படாததால் அரசுப் பேருந்துகளில் கூட்டம் இருந்தது. வெளியூர் செல்லும் பேருந்துகளில் கூட்டம் குறைவாக இருந்தது. புதிய பேருந்து நிலையம் தொடங்கி நகரின் முக்கியச் சாலைகள், சந்திப்புகளில் போலீஸார் அதிக அளவில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனர். ஆட்டோ, டெம்போக்கள் இயங்கின. பள்ளி, கல்லூரிகள் இயங்கின. தனியார் பள்ளி, கல்லூரிகள் மாணவர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகளை இயக்கினர்.
அரசுப் பள்ளி மாணவர்கள் பேருந்து நிலையத்திலிருந்து இறங்கி நடந்து சென்றனர். பந்த் காரணமாக மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது.
அரசுப் பள்ளிகள், மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் இயங்கின. பெரிய மார்க்கெட், உழவர் சந்தைகள் திறக்கப்பட்டிருந்தன. மீன் மார்க்கெட்டும் இயங்கியது. சேதராப்பட்டு, தட்டாஞ்சாவடி, மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகள் வழக்கம் போல இயங்கின. நேரு வீதி உள்பட நகரின் முக்கிய இடங்களில் அனைத்துக் கடைகளும் மூடப்பட்டிருந்தன. பெரும்பாலான முக்கியக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன.
பந்த் போராட்டம் அறிவித்த காங்கிரஸ், திமுக, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, புதிய நீதிக் கட்சி மற்றும் இயக்கத்தினர் ஊர்வலம் சென்றனர். பல இடங்களில் இக்கட்சியினர் மோட்டார் சைக்கிளிலும் ஊர்வலமாகச் சென்றனர்.
