Published : 11 Oct 2021 11:18 AM
Last Updated : 11 Oct 2021 11:18 AM

பொது இடங்களில் புகையிலைப் பொருட்கள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த சட்டத் திருத்தம் வேண்டும்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு அன்புமணி கடிதம்

விமான நிலையங்கள், உணவகங்கள், விடுதிகளிலும் புகைக்கத் தடை, புகையிலைப் பொருட்கள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த சட்டத் திருத்தம் வேண்டும் என, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு பாமக இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக, அன்புமணி இன்று (அக்.11) எழுதிய கடிதம்:

"மனிதர்களுக்கு உயிரிழப்பை ஏற்படுத்தும் 6 முதல் 8 முக்கிய நோய்களுக்கும், புற்றுநோய், இதய நோய்கள், நுரையீரல் நோய்கள் உள்ளிட்ட 40% தொற்றா நோய்களுக்கும் புகையிலைப் பயன்பாடுதான் முதன்மைக் காரணமாகத் திகழ்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

புகையிலைப் பயன்பாடு காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளும், செயல்பட முடியாத அளவுக்கு மனிதர்களை முடக்கும் நோய் பாதிப்புகளும் இந்தியாவில்தான் மிகவும் அதிகமாக உள்ளன. புகையிலைப் பயன்பாடு காரணமாக, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 13.5 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.

புகைப் பிடித்தல், புகையில்லாத புகையிலைப் பொருட்கள் பயன்பாடு, மற்றவர்கள் புகைத்துவிடும் புகையை சுவாசித்தல் போன்றவற்றால் இந்திய இளைஞர்களும் மாணவர்களும் மிகக் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

புகையிலைப் பொருட்களின் உறைகளில் 85% அளவுக்கு எச்சரிக்கைப் படங்களை வெளியிட்டதன் மூலம் பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும், புகையிலைப் பயன்பாட்டைக் குறைப்பதற்காகவும் நீங்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் மிகவும் பாராட்டத்தக்கவை.

2003ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சிகரெட் மற்றும் பிற புகையிலைப் பொருட்கள் (விளம்பரங்களை தடை செய்தல் மற்றும் வர்த்தகம், உற்பத்தி, வழங்கல் மற்றும் விநியோகத்தைக் கட்டுப்படுத்துதல்) சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முடிவு செய்திருப்பதற்காகவும், உங்களின் இந்த முயற்சிக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் பொதுமக்களிடம் இருந்து ஆதரவும், பாராட்டும் குவிந்து வருவதற்காகவும் உங்களுக்கு எனது பாராட்டுகளை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

மத்திய அமைச்சர் மண்சுக் மாண்டவியா: கோப்புப்படம்

சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்கள் கட்டுப்பாட்டுச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்து கடந்த ஜனவரி 31ஆம் தேதி அப்போதைய மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு நான் கடிதம் எழுதி இருப்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

2019ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட உலக இளைஞர் புகையிலைப் பயன்பாட்டு ஆய்வில் கிடைத்த புள்ளிவிவரங்களின்படி, மாணவர்களில் 29.5 விழுக்காட்டினர் மற்றவர்கள் புகைத்துவிடும் புகையை சுவாசிப்பதால் பாதிக்கப்படுகின்றனர்.

இவர்களில் அதிகபட்சமாக 23.4 விழுக்காட்டினர் திறந்தவெளி பொது இடங்களிலும், 21.2 விழுக்காட்டினர் அரங்கம் போன்ற மூடப்பட்ட பொது இடங்களிலும், 11.2 விழுக்காட்டினர் வீடுகளிலும் இத்தகைய பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்.

13 முதல் 15 வயது வரை உள்ள மாணவர்களில் ஐந்தில் ஒரு பங்கினர், அதாவது, 20 விழுக்காட்டினர் சிகரெட் போன்ற புகைக்கும் புகையிலை, புகையில்லாத புகையிலை அல்லது வேறு வகையான புகையிலை என, ஏதேனும் ஒரு வகையான புகையிலையைப் பயன்படுத்துகின்றனர். இளம் ஆண்களில் 9.6 விழுக்காட்டினரும், இளம் பெண்களில் 7.4 விழுக்காட்டினரும் புகையிலையைப் பயன்படுத்துகின்றனர்.

இன்றைய இளம் தலைமுறையினர் சராசரியாக 11.5 வயதில் சிகரெட் புகைக்கும் பழக்கத்துக்கும், 10.5 வயதில் பீடி புகைக்கும் பழக்கத்துக்கும், 9.9 வயதில் புகையில்லா புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்தும் பழக்கத்துக்கும் ஆளாகின்றனர்.

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்களில் 71 விழுக்காட்டினர் மற்றவர்கள் சிகரெட் புகைத்துவிடும் புகை தங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாகக் கூறியுள்ளனர். 58 விழுக்காட்டினர் பொது இடங்களுக்குள் புகைப் பிடிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் புகைப் பிடிப்பதும் தடை செய்யப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

சுருக்கமாகக் கூறவேண்டுமென்றால், சிகரெட் பிடிப்பவர்கள் விடும் புகை, அதை சுவாசிக்கும் இளம் மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது என்பதையும், அந்த விசயத்தில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதையும் இந்த ஆய்வு முடிவுகள் வலியுறுத்துகின்றன.

சிகரெட் மற்றும் பிற புகையிலைப் பொருட்கள் (விளம்பரங்களைத் தடை செய்தல் மற்றும் வர்த்தகம், உற்பத்தி, வழங்கல் மற்றும் விநியோகத்தைக் கட்டுப்படுத்துதல்) சட்டம் & 2003 என்ற பெயரிலான மத்திய புகையிலைக் கட்டுப்பாட்டுச் சட்டம் பல வழிகளிலும் புகையிலை சார்ந்த பன்னாட்டு ஒப்பந்தமான உலக சுகாதார நிறுவனத்தின் புகையிலைக் கட்டுப்பாட்டுச் செயல்திட்ட ஒப்பந்தத்துடன் இசைந்திருக்கிறது என்பதையும், இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டிருக்கிறது என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.

அதே நேரத்தில், இந்த விசயத்தில் உள்ள சில குறைபாடுகள் போக்கப்பட வேண்டும். புகையிலைப் பொருட்களின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும், பொது சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், இந்தச் சட்டத்தில் உள்ள சில குறைபாடுகள் காரணமாக, இச்சட்டம் அதன் நோக்கத்தை அடைவதில் தோல்வியடைந்துவிட்டது. கீழ்க்கண்ட திருத்தங்களை மேற்கொள்வதன் மூலம் இந்தச் சட்டத்தில் உள்ள குறைகளைக் களைய முடியும்.

சிகரெட் மற்றும் பிற புகையிலைப் பொருட்கள் (விளம்பரங்களைத் தடை செய்தல் மற்றும் வர்த்தகம், உற்பத்தி, வழங்கல் மற்றும் விநியோகத்தைக் கட்டுப்படுத்துதல்) சட்டத்திருத்த மசோதா 2020-ல் கீழ்க்கண்ட திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

* உணவகங்கள், தங்கும் விடுதிகள், விமான நிலையங்கள் போன்ற பொது இடங்களில் புகைப் பிடிப்பதற்கென தனிப் பகுதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருப்பதன் மூலம், அந்த இடங்களில் புகைப்பிடிக்க 2003ஆம் ஆண்டின் சட்டம் அனுமதிக்கிறது. இந்தப் பிரிவு அகற்றப்பட வேண்டும்.

* புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படும் இடங்களில் அவை குறித்த விளம்பரங்களோ, அப்பொருட்களைப் பார்வைக்கு வைப்பதோ கண்டிப்பாகத் தடை செய்யப்பட வேண்டும்.

* 2003ஆம் ஆண்டின் புகையிலைப் பொருட்கள் கட்டுப்பாட்டுச் சட்டத்தின்படி, கடைகளில் ஒற்றை சிகரெட் விற்பனையும், சுவையூட்டப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனையும் அனுமதிக்கப்படவில்லை. அதனால், அவை இரண்டும் தடை செய்யப்பட வேண்டும்.

* 2003ஆம் ஆண்டின் புகையிலைப் பொருட்கள் கட்டுப்பாட்டுச் சட்டத்தை மீறுவோருக்கு விதிக்கப்படும் அபராதம் என்பது, அத்தகைய செயல்களை மீண்டும் செய்வதைத் தடுக்கும் அளவுக்கு இல்லை. இந்தக் குறைபாடு புதிய சட்டத் திருத்தத்தில் போக்கப்பட வேண்டும்.

* புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதற்கான சட்டப்பூர்வ வயது 18-லிருந்து 21 ஆக உயர்த்தப்பட வேண்டும்.

* கிரிக்கெட் போட்டிகளுக்கான நேரடி ஒளிபரப்பின்போது சிகரெட், பீடி மற்றும் புகையில்லாத புகையிலைப் பொருட்கள் மறைமுக விளம்பரங்கள் மூலம் விளம்பரப்படுத்தப்படுவது தடை செய்யப்பட வேண்டும்.

சிகரெட் மற்றும் பிற புகையிலைப் பொருட்கள் (விளம்பரங்களைத் தடை செய்தல் மற்றும் வர்த்தகம், உற்பத்தி, வழங்கல் மற்றும் விநியோகத்தைக் கட்டுப்படுத்துதல்) சட்டத்திருத்த மசோதா 2020-ஐ வரும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்து நிறைவேற்ற வேண்டிய அவசியத் தேவை ஏற்பட்டிருக்கிறது. அவ்வாறு புதிய சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்படும்போது, இந்தச் சட்டத்தின் நோக்கத்தைச் சிதைக்கும் வகையில் உள்ள அனைத்துக் குறைபாடுகளும் களையப்பட வேண்டும்.

எனவே, பொது சுகாதாரத்தின் நலன் கருதி, சிகரெட் மற்றும் பிற புகையிலைப் பொருட்கள் (விளம்பரங்களைத் தடை செய்தல் மற்றும் வர்த்தகம், உற்பத்தி, வழங்கல் மற்றும் விநியோகத்தைக் கட்டுப்படுத்துதல்) சட்டத்திருத்த மசோதா 2020-ஐ வரும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில், நான் முன்வைத்துள்ள திருத்தங்களுடன் தாக்கல் செய்யவேண்டும் என்ற எனது கோரிக்கையைப் பரிசீலிக்க வேண்டும். அதன் மூலம், கோடிக்கணக்கான இளைஞர்களையும், பொதுமக்களையும் கொடிய புகையிலைப் பொருட்களில் இருந்து காப்பாற்ற வேண்டும் கேட்டுக்கொள்கிறேன்".

இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x