

தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற 5-வது கட்ட மெகா முகாமில் 22.52 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
கரோனா 3-வது அலை எச்சரிக்கை இருப்பதால், தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் ஞாயிறுதோறும் மெகா கரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, கடந்த செப்டம்பர் 12, 19, 26, அக்டோபர் 3 என மொத்தம் 4 முகாம்களில் 87.57 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
இளைஞர்கள் ஆர்வம்
இந்நிலையில், தமிழகம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள், ரயில் நிலையங்கள், பூங்காக்கள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் 5-வது கட்ட மெகா தடுப்பூசிமுகாம் நேற்று நடந்தது. சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இப்பணியில் சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடந்தமுகாமில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆர்வமாக வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
அவகாசம் முடிந்தும் 2-வது தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களை சுகாதாரத் துறையினர் செல்போனில் தொடர்பு கொண்டு, அவர்களது தயக்கத்தை போக்கி, அவர்களுக்கு 2-வது தவணை தடுப்பூசி போடப்பட்டது. சில இடங்களில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
முதல்வர் அறிவுறுத்தல்
சென்னை சின்னமலை புனித பிரான்சிஸ் சேவியர் தொடக்கப் பள்ளி, கிண்டி மடுவன்கரை ஆரம்பசுகாதார நிலையத்தில் நடந்த முகாம்களை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தடுப்பூசி போட்டுக்கொள்ள வந்த மக்கள், பணியாளர்களிடம் முதல்வர் உரையாடினார். தடுப்பூசி போடும் பணியை தீவிர இயக்கமாக நடத்த வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் சிறப்பு கவனம் செலுத்தி கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்களின் இலக்கை முழுமையாக அடைய வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது, அமைச்சர்பொன்முடி, சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் உடன் இருந்தனர்.
ராமநாதபுரம், திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் நடந்த முகாம்களை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அந்தந்த மாவட்டங்களில் முகாம்களை அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் ஆய்வு செய்தனர்.
தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற 5-ம் கட்ட மெகா கரோனா தடுப்பூசி முகாமில் 18 வயதுக்கு மேற்பட்ட 22.52 லட்சம்பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.சென்னையில் 1.63 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.