Published : 11 Oct 2021 03:12 AM
Last Updated : 11 Oct 2021 03:12 AM

இரண்டு கட்டங்களாக நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல்; நாளை வாக்கு எண்ணிக்கை: 74 மையங்களிலும் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் தனியார் பொறியியல் கல்லூரியில் எண்ணப்பட உள்ளன. இந்த மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேற்று ஆய்வு செய்தார்.

சென்னை

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள், 74 மையங்களில் நாளை எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 6, 9 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடந்தன. 6-ம் தேதி நடந்த முதல்கட்ட தேர்தலில் 74.37 சதவீத வாக்குகள் பதிவாகின. நேற்று முன்தினம் நடந்த 2-ம் கட்ட தேர்தலில் சராசரியாக 78.47 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 85.31 சதவீதம், கள்ளக்குறிச்சியில் 82.59, ராணிப்பேட்டையில் 82.52, வேலூரில் 81.07, திருப்பத்தூரில் 77.85, செங்கல்பட்டில் 75.51, தென்காசியில் 73.35, காஞ்சிபுரத்தில் 72.33, திருநெல்வேலியில் 69.34 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. மேலும், இதர 28 மாவட்டங்களில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கும் நேற்று முன்தினம் இடைத்தேர்தல் நடந்தது. அதில் 70.51 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இரு கட்டங்களாக நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இடம்பெற்ற வாக்குப் பெட்டிகள், 74 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில்பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அங்கு 3 அடுக்கு போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அனைத்து மையங்களிலும் வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, அதன் காட்சிகள் பெரிய திரைகளில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

4 வாக்குச் சீட்டுகள்

இந்நிலையில், 74 மையங்களிலும் வாக்கு எண்ணிக்க நாளைநடக்கிறது. வாக்கு எண்ணிக்கையின்போது பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்தப் பகுதிகளில் தீவிர கண்காணிப்புக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தத் தேர்தலில் ஒவ்வொருவரும் 4 வாக்குகளை தனித்தனிவாக்குச்சீட்டுகளில் செலுத்தியுள்ளனர். கிராம ஊராட்சி வார்டு உறுப்பினருக்கான வாக்குகளை வெள்ளை நிற வாக்குச் சீட்டிலும், கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு இளஞ்சிவப்பு நிற வாக்குச் சீட்டிலும், ஊராட்சி ஒன்றிய வார்டுஉறுப்பினர் பதவிக்கு பச்சை நிறவாக்குச் சீட்டிலும், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு மஞ்சள் நிற வாக்குச் சீட்டிலும் வாக்களித்தனர். இரு கிராம ஊராட்சி வார்டுகளுக்கு பொதுவாக அமைக்கப்படும் வாக்குச்சாவடிகளில் வெள்ளை மற்றும் இளம் நீல நிறத்தில் இரு வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்பட்டன.

வாக்கு எண்ணிக்கை நடக்கும் வளாகத்தில் கம்பி வலைகள், மரத்தால் ஆன தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் அந்தந்த வார்டு வாரியாக, வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் பெட்டிகள் திறக்கப்படும். அதற்காக அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் உள்ளவாக்குச்சாவடிகளுக்கு ஏற்ப40 மேசைகள் வரை போடப்பட்டுள்ளன. முதலில் வண்ணங்கள் வாரியாக வாக்குச்சீட்டுகள் பிரிக்கப்பட்டு, தலா 50 சீட்டுகள் கொண்ட கட்டுகளாக கட்டப்படும். பின்னர் அந்த வாக்குகள் 4 அல்லது 5 பிரிவாக பிரித்து, தொடர்புடைய கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய வார்டு, மாவட்ட வார்டுகளுக்கான மேசைகளுக்கு கொண்டு செல்லப்படும்.

வாக்கு எண்ணிக்கை விவரங்கள், அந்தந்த அறை மேற்பார்வையாளர் மூலம் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அனுப்பப்படும்.அவர் வட்டார பார்வையாளரிடம் வழங்குவார். அந்த விவரங்கள் மாவட்ட பார்வையாளர்களுக்கும், மாவட்ட தேர்தல் அலுவலருக்கும் அனுப்பி வைக்கப்படும். அங்கிருந்து மாநில தேர்தல் ஆணையருக்கு அனுப்பப்படும். அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு, வட்டாரபார்வையாளர் ஒப்புதலுடன் வெற்றி, தோல்வி விவரங்கள் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்படும். இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் வீடியோவில் பதிவு செய்யவும், வெப் ஸ்ட்ரீமிங் முறையில், மாநில தேர்தல் ஆணையத்தில் இருந்து கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

2 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப்பதிவு

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நேற்று முன்தினம் நடந்த 2-ம் கட்ட தேர்தலில் காஞ்சிபுரம் மாவட்டம் பூந்தண்டலம் கிராமத்தில் 173-வது வாக்குச்சாவடியில், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய வார்டுக்கான வாக்குச்சீட்டில் சின்னங்கள் தவறாக பதிவாகி இருந்தன. அந்த வாக்குச்சாவடிக்கு மட்டும் இன்று (அக்.11) மறுவாக்குப்பதிவு நடக்க உள்ளது.

இதேபோன்று செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் ஆலப்பாக்கம் ஊராட்சியில் வார்டு எண் 1, 2 ஆகியவற்றுக்கு பொதுவானதாக வாக்குச்சாவடி எண் 32 அமைக்கப்பட்டது. 1-வது வார்டுக்கான உறுப்பினர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், 2-வது வார்டு உறுப்பினர் தேர்தலுக்காக வழங்கப்பட்ட வாக்குச்சீட்டுகள் 1-வது வார்டு வாக்காளர்களுக்கும் வழங்கப்பட்டது. அதனால் இந்த வாக்குச் சாவடிக்கும் இன்று மறு வாக்குப்பதிவு நடக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x