

ஆரோவில் அறக்கட்டளை தலைவராக தமிழக ஆளுநர் ரவியும், உறுப்பினர்களில் ஒருவராக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசையும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆரோவில் சர்வதேச நகரின் வளர்ச்சிப் பணிகள் அனைத்தும் ஆரோவில் பவுண்டேஷன் சார்பில் மேற்கொள்ளப்படுகிறது. இதன் தலைவராக இருந்த முன்னாள் எம்.பி. கரண்சிங் பதவிக்காலம் கடந்த ஆண்டு நவம்பர் 23-ம் தேதியுடன் முடிந்தது. இதையடுத்து புதிய தலைவர், உறுப்பினர்களை தேர்வு செய்யும் பணியை மத்திய கல்வி அமைச்சகம் தொடங்கியது. ஆரோவில் அறக்கட்டளை தலைவராக தமிழக ஆளுநர் ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.
உறுப்பினராக துணைநிலை ஆளுநர் தமிழிசை
உறுப்பினர்களாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர்தமிழிசை, புதுச்சேரி மகாத்மா காந்தி பட்டமேற்படிப்பு மையத்தைச் சேர்ந்த டாக்டர் நிர்மா ஓசா, எழுத்தாளர்அரவிந்தன் நீலகண்டன், மேற்கு வங்க பல்கலைக்கழக பேராசிரியர் கவுதம் கோஷல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், ஐதராபாத் பல்கலைக்கழக தலித் ஆதிவாசி துறைத்தலைவர் சர்ராஜூ, கர்நாடக பல்கலைக்கழக அரசியல் அறிவியல் படிப்புத்துறை பேராசிரியர் நந்தன கவுரப்பா பசப்பா மற்றும் கல்வி அமைச்சகத்தின் 2 செயலர்கள் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர். இதற்கான அறிவிப்பை மத்திய கல்வி அமைச்சக உயர்கல்வி பிரிவு இணை செயலர் நீடா பிரசாத் வெளியிட்டுள்ளார். புதிய குழு விரைவில் கூடி ஆரோவில் சர்வதேச நகரின் அடுத்தகட்ட வளர்ச்சி குறித்து விவாதிக்கும்.