Published : 11 Oct 2021 03:12 AM
Last Updated : 11 Oct 2021 03:12 AM

திருநெல்வேலியில் பாஜக பிரமுகர் மீது தாக்குதல் தர்ணாவில் ஈடுபட்ட பொன்.ராதாகிருஷ்ணன் கைது: திமுக எம்.பி., மகன்கள் உட்பட 30 பேர் மீது கொலை மிரட்டல் வழக்குப் பதிவு

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே பாஜக பிரமுகர் தாக்கப்பட்டது தொடர்பாக திருநெல்வேலி தொகுதி திமுக எம்.பி. ஞானதிரவியம் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து, கைது செய்யக்கோரி திருநெல்வேலி சந்திப்பில் இரவில் தர்ணாவில் ஈடுபட்ட பொன். ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். எம்.பி., அவரது மகன்கள் இருவர் உட்பட 30 பேர் மீது பணகுடி போலீஸார் கொலை மிரட்டல் உட்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே உள்ள ஆவரைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர் (35). பாஜக பிரமுகரான இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த திமுகவினருக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த 8-ம் தேதி காவல்கிணறு பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் பாஸ்கர் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோதுஅங்கு வந்த ஒரு கும்பல் அவரை தாக்கியுள்ளது. உணவகத்தில் இருந்த சிசிடிவி கேமராவையும் அடித்து நொறுக்கிவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

தாக்குதலில் காயம் அடைந்த பாஸ்கர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தகவலறிந்து வந்த பாஜகவினரிடம், திருநெல்வேலி திமுக எம்.பி. ஞானதிரவியம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தன்னை தாக்கியதாக பாஸ்கர் கூறியுள்ளார்.

இரவில் திடீர் தர்ணா

தகவல் அறிந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நேற்று முன்தினம் மருத்துவமனைக்குச் சென்று பாஸ்கரிடம் நலம் விசாரித்தார். பின்னர், இரவு 10.30 மணியளவில் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் பாஜகவினர் திருநெல்வேலி சந்திப்பு பாரதியார் சிலை அருகில் திரண்டு தர்ணாவில் ஈடுபட்டனர். திமுக எம்.பி. ஞானதிரவியம் உள்ளிட்டோர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து, கைது செய்யக் கோரி இப்போராட்டம் நடைபெற்றது.

அவர்களிடம் திருநெல்வேலி மாநகர துணை காவல் ஆணையர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். எம்.பி. உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், போராட்டத்தை கைவிடுமாறும் வலியுறுத்தினர்.

ஆனால், கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று அவர்கள் கூறியதையடுத்து, பொன்.ராதாகிருஷ்ணன் உட்பட 5 பேரை நள்ளிரவில் போலீஸார் கைது செய்து, திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். காவல் நிலையத்திலும் தர்ணாவில் ஈடுபட்ட பொன்.ராதாகிருஷ்ணன், நேற்று காலையில் விடுவிக்கப்பட்டார்.

கொலை மிரட்டல் வழக்கு

இதற்கிடையே, பாஸ்கர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக திமுக எம்.பி. ஞானதிரவியம், அவரது மகன்கள் சேவியர் ராஜா, தினகரன் உட்பட 30 பேர் மீது பணகுடி போலீஸார் கொலை மிரட்டல் உட்பட 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x