

தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி உருவாகி 5 நாட்கள் நிறை வடைந்துள்ளன. ஆனால், இந்த 5 தினங்களில், தேமுதிகவுக்கு பணம் தர திமுக முன்வந்ததாக வைகோ பேசியது, விஜயகாந்த் அணி இல்லை, மக்கள் நலக் கூட்டணி என்று தான் சொல்வோம் என இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு கூறியது, விஜயகாந்த் தொண்டை சிக்கல் காரணத்தால் பிரச்சாரம் செய்ய மாட்டார் என்று செய்திகள் வெளியானது என பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறின.
இதனையொட்டி பல்வேறு செய்திகளும் வெளியாகின. அந்த செய்திகள் அனைத்தும் வதந்தியே அவற்றை யாரும் நம்ப வேண்டாம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ள கருத்தில், “என்னைப்பற்றியும், தேமுதிகவைப் பற்றியும், தேமுதிக அமைத்துள்ள கூட்டணி பற்றியும் பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. வதந்திகள் அனைத்தும் பொய்யான தகவல்கள் ஆகும். நான் நிச்சயம் பிரச்சாரத்தின் மூலம் மக்களை சந்திப்பேன். தேமுதிகவின் லட்சியம், நிச்சயம் வெல்லும்” என்று கூறியுள்ளார்.