மாற்றுத் திறனாளி தனித் தேர்வருக்கு 60 கி.மீ. தொலைவில் தேர்வு மையம்: வெகுதொலைவில் மையம் அமைப்பது தவிர்க்கப்படுமா?

மாற்றுத் திறனாளி தனித் தேர்வருக்கு 60 கி.மீ. தொலைவில் தேர்வு மையம்: வெகுதொலைவில் மையம் அமைப்பது தவிர்க்கப்படுமா?

Published on

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுத தனித் தேர்வராக விண்ணப்பித்த மாற்றுத் திறனாளி மாணவிக்கு, சுமார் 60 கி.மீ. தொலைவில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது சமூக ஆர்வலர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

திருச்சி மாவட்டம், சர்க்கார்பாளையம் மாதா கோயில் தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஜேம்ஸ்மேரி மகள் அனுஜெயஸ்ரீ(21). 80 சதவீதம் பாதிப்பு உள்ளவரான மாற்றுத் திறனாளியான இவர் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை தனித் தேர்வராக எழுத விண்ணப்பித்தார். இவரது வசிப்பிடத்திலிருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ள விராலிமலையை அடுத்த வளநாடு பகுதியில் உள்ள பள்ளியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு அனுமதிச் சீட்டு அனுப்பப்பட்டுள்ளது.

இதையடுத்து, தேர்வு மையத்தை திருச்சி நகரில் மாற்றித் தருமாறு கோரி மனு அளிப்பதற்காக திருச்சியில் உள்ள அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குநர் அலுவலகத்துக்கு நேற்று தனது தாய் ஜேம்ஸ் மேரியுடன் அனுஜெயஸ்ரீ வந்திருந்தார்.

இதுகுறித்து ஜேம்ஸ் மேரி கூறியதாவது: எனது மகள் பிறக்கும்போதே மாற்றுத் திறனாளியாக பிறந்தார். முதுகில் வளர்ந்திருந்த கட்டியை நீக்குவதற்காக பிறந்த சில மாதங்களிலேயே அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. கால் பாதிப்பு மட்டுமின்றி அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டதால் மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் ஊருக்கு அருகேயுள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார்.

9-ம் வகுப்பு இறுதியில் முதுகில் மீண்டும் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டியதாகிவிட்டது. இதனால், படிப்பில் போதிய கவனம் செலுத்த முடியாமல் 10-ம் வகுப்பில் 3 பாடங்களில் தோல்வி அடைந்தார். மறுதேர்வு எழுதியும் பலனில்லை.

சில காரணங்களால் முதுகில் ஆறாத காயத்துடன் இன்றளவும் போராடி வருகிறார். தொடர்ந்து முக்கால் மணி நேரம் அமர்ந்திருக்கக்கூட முடியாத அவரால், தேர்வெழுதுவதற்கு 60 கி.மீ. தொலைவுக்கு செல்ல முடியாது. எனவே, உதவியாளர் உதவியுடன் தேர்வு எழுத அனுமதி கேட்டும், திருச்சியிலேயே தேர்வு மையத்தை மாற்றித் தருமாறும் கோரியும் இங்கு வந்தோம் என்றார்.

இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் திருச்சி மண்டல துணை இயக்குநர் வெ.முருகனிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது: தனித் தேர்வர்களுக்கு தேர்வு மையம் ஒதுக்குவதில் எங்களுக்கு தொடர்பு இல்லை. விண்ணப்பித்தவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே தேர்வு மையம் ஒதுக்கப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் 10-ம் வகுப்பு தனித் தேர்வர்களுக்காக உறையூர் தனலட்சுமி சீனிவாசன், வேங்கூர் செல்லம்மாள், மணப்பாறை லட்சுமி, வளநாடு விடியல் ஆகிய பள்ளிகளில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மாணவியின் நிலை வருத்தமளிப்பதாக உள்ளது. இவருக்கு திருச்சி நகரிலேயே தேர்வு மையத்தை மாற்றித் தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வரும் ஆண்டுகளில் இதுபோன்று நேரிடாமல் இருக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க துறை தலைமையகத்துக்கு பரிந்துரை செய்யப்படும்” என்றார்.

இதுதொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறும்போது, “தேர்வு மைய அங்கீகாரம் இல்லாத பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் தனித் தேர்வு எழுதும் மாற்றுத் திறனாளி மாணவ- மாணவிகள் எளிதாகச் சென்று வரும் வகையில் தேர்வு மையங்களை அமைக்க அரசுத் தேர்வுகள் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

இரண்டரை மணி நேரம் காத்திருந்து அவதி

காலை 11.30 மணிக்கு அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குநர் அலுவலகத்துக்கு தாயுடன் வந்தார் அனுஜெயஸ்ரீ. படிக்கட்டுகளில் ஏற முடியாது என்பதால் ஜேம்ஸ் மேரி மட்டுமே அலுவலகத்துக்குள் சென்றார். அலுவலர்களைச் சந்தித்த பிறகு பிற்பகல் 2 மணிக்குத்தான் இருவரும் அங்கிருந்து புறப்பட்டனர். அதுவரை அலுவலகத்துக்கு வெளியில் தனது 3 சக்கர மோட்டார் சைக்கிளில் அவ்வப்போது உட்காருவதும், ஊன்றுகோல் துணையுடன் சிறிது நேரம் நிற்பதுமாக காத்திருந்து அவதிக்குள்ளானார் அனுஜெயஸ்ரீ.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in