சென்னையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு பணி தீவிரம்

சென்னையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு பணி தீவிரம்
Updated on
1 min read

சென்னையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் இல்லாத சுமார் 1 லட்சத்து 55 ஆயிரத்து 260 கட்டிடங்களில் அந்த கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

வடகிழக்குப் பருவமழை விரைவில் தொடங்கவுள்ள நிலையில், மழையால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க அரசு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. சென்னை மாநகராட்சியும், சென்னைக் குடிநீர் வாரியமும் அதற்கான பணிகளைச் செய்கின்றன. தற்போது, மழைநீர் சேகரிப்புக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. அதன்படி, புதிய கட்டிடங்களுக்கு மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் பழைய கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் இல்லாத கட்டிடங்களில் அவற்றை விரைவாகச் செய்து முடிப்பதற்கான பணிகளை சென்னை குடிநீர் வாரியம் தீவிரப்படுத்தியுள்ளது. அண்மையில் சென்னையில் உள்ள கட்டிடங்களில் ஆய்வு மேற்கொண்டதில், சுமார் 1 லட்சத்து 55 ஆயிரத்து 260 கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.

இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:

சென்னைக் குடிநீர் வாரியத்துக்கு சொந்தமான 432 கட்டிடங்களிலும், 60 அரசு மருத்துவமனைகளிலும் மழைநீர் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சென்னையில் மொத்தமுள்ள 8 லட்சத்து 23 ஆயிரத்து 446 குடியிருப்புகள் மற்றும் வீடுகளில் இதுவரை 6 லட்சத்து 71 ஆயிரத்து 817-ல் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், 1,192 அரசுக் கட்டிடங்களில் 1,167-லும், 39,181 வணிகக் கட்டிடங்களில் 36,475-லும், 4,806 தொழிற்சாலைக் கட்டிடங்களில் 4,213-லும், 531 தனியார் மருத்துவமனைகளில் 480-லும், 883 தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் 627-லும் மழைநீர் கட்டமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

இவைதவிர சுமார் 1 லட்சத்து 55 ஆயிரத்து 260 கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படவில்லை. அவற்றை பருவமழை தொடங்குவதற்கு முன்பு செய்து முடிக்க கட்டிட உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், தேவையான தொழில்நுட்ப உதவிகளையும் செய்து வருகிறோம். அனைத்துக் கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை முழுமையாக ஏற்படுத்துவதற்கான பணிகளை குடிநீர் வாரியம் தீவிரப்படுத்தியுள்ளது.

சென்னையில் 200 வார்டுகளில் உள்ள 35 ஆயிரம் தெருக்களில் 2 ஆயிரம் சுய உதவிக் குழுவினர் வீடு, வீடாகச் சென்று பருவமழை தொடங்குவதற்கு முன்பு மக்கள் தங்களது வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை புனரமைக்கும்படி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

மேலும், திறந்த வெளியில் (தரைப்பகுதிகள்) பெய்யும் மழைநீரை சேகரிக்க குறிப்பாக பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் உள்ள விளையாட்டுத் திடல்களிலும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் திறந்தவெளி பகுதியிலும் பெய்யும் மழைநீரை அங்கேயே சேகரிப்பதற்கான நவீன கட்டமைப்புகளை ஏற்படுத்தும்படி தொடர்ந்து அறிவுறுத்துவதுடன், தேவையான தொழில்நுட்ப உதவிகளையும் வழங்கி வருகிறோம்.

இதன்மூலம் மழைக்காலத்தில் சாலைகளிலும், குடியிருப்புகள், வீடுகளிலும் வெள்ளநீர் புகுவது தடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in