Published : 11 Oct 2021 03:13 AM
Last Updated : 11 Oct 2021 03:13 AM

மாநகராட்சி உற்பத்தி செய்யும் இயற்கை உரம்; ‘உரம்’ என்ற பிராண்டில் விற்பனை: மாநகராட்சி கையிருப்பில் 1,750 டன் உள்ளது

சென்னை

சென்னை மாநகராட்சி உற்பத்தி செய்யும் இயற்கை உரம், சுமார் 1,750 டன் அளவில் கையிருப்பில் உள்ளது. அதை ‘உரம்’ என்ற பிராண்ட் பெயரில் விற்பனை செய்ய மாநகராட்சி நிர்வாகம் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

உள்ளாட்சி அமைப்புகள் முறையாக திடக்கழிவு மேலாண்மை செய்வதற்காக மத்திய அரசு, தூய்மை இந்தியா இயக்கத்தை தொடங்கி, அதன்மூலம் நிதி ஒதுக்கி வருகிறது. சென்னையில் தினமும் சராசரியாக 5,200 டன் குப்பைகள் உருவாகின்றன. இதுநாள் வரை அவை அனைத்தும் அப்படியே கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி குப்பை கொட்டும் வளாகங்களில் கொட்டப்பட்டு வந்தன.

இதனிடையே தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் சென்னை மாநகராட்சிக்கு போதிய நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. அதன்மூலம் மக்கும் குப்பை, மக்காத குப்பை என வகை பிரிக்கப்பட்டு, மக்கும் குப்பைகள் இயற்கை உரமாகவும், உயிரி எரிவாயு தயாரிக்கவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மக்காத குப்பைகளில் உள்ள உலோகங்கள், பிளாஸ்டிக் மறு சுழற்சிக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

மாநகராட்சியின் இத்தகைய நடவடிக்கைகளால் குப்பை கொட்டும் வளாகங்களுக்கு செல்லும் குப்பைகளின் அளவு தினமும் 1,000 டன்னுக்கு மேல் குறைந்துள்ளது. மேலும், மாநகராட்சி தயாரிக்கும் இயற்கை உரங்களுக்கு பிராண்ட் பெயர் உருவாக்கி, அதை விவசாயிகளுக்கு விற்க வேளாண் துறையில் அனுபவம் பெற்ற மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி திட்டமிட்டுள்ளார்.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

மாநகராட்சி சார்பில் 160 அமைவிடங்களில் செயல்படும் 208 மையங்களில், மக்கும் குப்பைகளில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இயற்கை உரம் தயாரிக்கும் திட்டத்தில் தினமும் 583 டன் குப்பைகள் இயற்கை உரமாக மாற்றப்படுகின்றன. இவை மாநகராட்சி பூங்காக்கள் மற்றும் மாநகரப் பகுதியில் மரக்கன்றுகள் நடவும், நகர்ப்புற அடர் வனங்கள் அமைக்கவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

தற்போது மாநகராட்சியிடம் 1,750 டன் இயற்கை உரங்கள் கையிருப்பில் உள்ளன. இவற்றை வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக விவசாயிகளுக்கு விற்க மாநகராட்சி ஆணையர் ஏற்பாடு செய்துள்ளார். அதன்படி மாநகராட்சியின் இயற்கை உரத்துக்கு ‘உரம்’ என்ற பிராண்ட் பெயர் வைக்கப்பட்டு, எழுத்துருவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி உற்பத்தி செய்யும் இயற்கை உரம் இந்தப் பெயரில்தான் விற்பனை செய்யப்பட உள்ளது என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x