Published : 11 Oct 2021 03:13 AM
Last Updated : 11 Oct 2021 03:13 AM

கண் நோய்களை ஆரம்பத்தில் கண்டறிந்து சரிசெய்யும் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்துதல் அவசியம்: தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவுறுத்தல்

சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் 11-வது விழித்திரை அறுவை சிகிச்சை தேசியக் கருத்தரங்கை தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார். டாக்டர் அகர்வால் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் அமர் அகர்வால், இயக்குநர் டாக்டர் அதியா அகர்வால், ராஜன் கண் மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் மோகன் ராஜன், மும்பையில் உள்ள ஆதித்ய ஜோத் மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் எஸ்.நடராஜன் ஆகியோர் உடன் உள்ளனர். படம்: பு.க.பிரவீன்

சென்னை

கண் சார்ந்த நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சரிசெய்யும் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்துதல் அவசியம் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் 11-வது விழித்திரை அறுவை சிகிச்சை தேசியக் கருத்தரங்கம் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடைபெற்றது. இந்தியா முழுவதும் இருந்து 750-க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் கருத்தரங்கில் பங்கேற்றனர்.

கருத்தரங்கை தொடங்கி வைத்து தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியது:

மனித உடலில் மகத்தான மணி வைரமாகத் திகழ்வது நம் கண்கள்தான். அதனைப் பேணி காக்கவும், ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக அதனை சரி செய்யவும் போதிய விழிப்புணர்வு அனைவருக்கும் அவசியம். ஓர் உண்மையை நாம் அனைவரும் உணர வேண்டும். நமக்கு உடலில் எந்த வகையான நோய் ஏற்பட்டாலும், அது நமது கண்களையும் பாதிக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

சர்க்கரை நோயால் ஏற்படும் விழித்திரை பாதிப்பு, பார்வை இழப்பு ஆகியவை இந்தியாவில் அதிகமாக உள்ளது. அவற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சரிசெய்வதற்கான நடவடிக்கைமற்றும் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்துதல் அவசியம்.

இத்தகைய கருத்தரங்குகள் மூலமாக மருத்துவத் துறையினருக்கு புதிய தொழில்நுட்பங்களைக் கற்பிப்பதும், பயிற்சி அளிப்பதும் மிகவும் முக்கியம். ஆரோக்கியமான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி, வாழ்க்கை முறைகளைப் பின்பற்றினால் கண் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கலாம் என்றார்.

டாக்டர் அகர்வால் மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் அமர் அகர்வால் பேசும்போது, “கண்களில் விழித்திரை அதிமுக்கியமானது. அதனை அவ்வப்போது பரிசோதனை செய்து கொள்வதும், தேவைப்படும்போது உரிய சிகிச்சை எடுத்துக் கொள்வதும் அவசியம்.

விழித்திரை அறுவை சிகிச்சையில் உள்ள நவீன தொழில்நுட்பங்களை பகிர்வதற்கான நிகழ்வாகவே இந்த கருத்தரங்கு நடத்தப்படுகிறது. பார்வை இழப்பு இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் இத்தகைய நடவடிக்கையை முன்னெடுத்துள்ளோம்” என்றார்.

மும்பையில் உள்ள ஆதித்ய ஜோத் மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் எஸ்.நடராஜன் பேசும்போது, “தமிழகத்தில் சர்க்கரை நோயாளிகளை அவர்களது வசிப்பிடங்களுக்கே சென்று விழித்திரை பரிசோதனை மேற்கொள்ளும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது” என்றார்.

இந்த கருத்தரங்கில் டாக்டர் அகர்வால் மருத்துவமனையின் தலைமை செயல் இயக்குநர் மருத்துவர் அதில் அகர்வால், நிர்வாக இயக்குநர் மருத்துவர் அஸ்வின் அகர்வால், இயக்குநர் மருத்துவர் அதியா அகர்வால், ராஜன் கண் மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் மோகன் ராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x