பூங்கோரைப் பாசியால் பச்சை நிறமாக மாறிய பாம்பன் கடல்: சிறிய மீன்கள் உயிரிழக்கும் அபாயம்

பூங்கோரைப் பாசியால் பச்சை நிறமாக மாறிய  பாம்பன் கடல்.
பூங்கோரைப் பாசியால் பச்சை நிறமாக மாறிய பாம்பன் கடல்.
Updated on
1 min read

பாம்பன் கடல் பகுதியில் பூங்கோரை பாசியால் கடல் நீரின் நிறம் பச்சையாக மாறியது. இதனால் சிறிய ரக மீன்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ராமேசுவரம் அருகே மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பாம்பன் முதல் வேதாளை வரை பச்சை நிறப் பூங்கோரைப் பாசிகள் நீரோட்டத்தில் அடித்து வரப்பட்டு கரை ஒதுங்கத் தொடங்கி உள்ளன. இதையடுத்து மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய ஆராய்ச்சியாளர்கள் கடல் நீரை ஆய்வு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து மரைக்காயர் பட்டினத்தில் உள்ள மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கூறிய தாவது:

மன்னார் வளைகுடா கடற் பகுதியில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் 'நாட்டிலுக்கா சின்டிலெம்ஸ்' கடற்பாசி அதிக அளவில் உற்பத்தியாகும். இதனை மீனவர்கள் 'பூங்கோரை' என்று அழைப்பார்கள். இந்த பாசிகள் கடலில் அதிக பரப்பளவில் படரும்போது கடல் நீர் பச்சை நிறத்தில் காட்சியளிக்கும்.

கடந்த 2019-ம் ஆண்டு இந்த பாசிகள் படர்ந்தபோது, பாறைகளில் வசிக்கக் கூடிய மீன்களின் செதில்கள் அடைக்கப்பட்டு சுவாசிக்க முடியாமல் சிரமப்பட்டன. இதில் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து கரை ஒதுங்கின. இந்த ஆண்டு தற்போதுவரை அதுபோன்ற சம்பவம் எதுவும் நிகழவில்லை.

இது விஷத்தன்மை உடைய பாசி கிடையாது. இந்த பாசியால் பாதிக்கப்பட்டு மூச்சடைப்பால் இறந்த மீன்களை நன்றாக கழுவிவிட்டு சாப்பிடுவதால் மனிதர்களுக்கு எவ்விதமான தீங்கும் இல்லை.

இன்னும் இரண்டு வாரங்களில் கடல் இயல்பு நிலைக்கு வந்துவிடும். இதனால் மீனவர்கள் அச்சப்படத் தேவையில்லை என்று கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in