மதுரையில் இருந்து வெளிநாடு செல்லும் கொலு பொம்மைகள்: விற்பனை அதிகரிப்பால் மண்பாண்ட கலைஞர்கள் மகிழ்ச்சி

மதுரையில் இருந்து வெளிநாடு செல்லும் கொலு பொம்மைகள்: விற்பனை அதிகரிப்பால் மண்பாண்ட கலைஞர்கள் மகிழ்ச்சி
Updated on
1 min read

மதுரை விளாச்சேரியிலிருந்து கலைநயமிக்க கொலு பொம்மை கள் இந்தாண்டு வெளிநாடுகள் சென்றதாலும், கடந்தாண்டை விட விற்பனை அதிகரித்ததாலும் மண்பாண்ட கலைஞர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள விளாச்சேரியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட மண்பாண்ட கலைஞர்கள் குடும்பத்துடன் வசிக்கின்றனர். இவர்கள் மண்பாண்டப் பொருட்கள் மற்றும் விநாயகர் உள்ளிட்ட சுவாமி சிலைகள், கொலு பொம்மைகள் ஆகியவை தயாரிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். இங்கிருந்து குறைந்த விலையில் தரமான பொம்மைகள் தயாரித்து வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடு என எல்லை கடந்து விற்பனை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து விளாச்சேரியைச் சேர்ந்த ரா.ஹரிகிருஷ்ணன் கூறியதாவது: விளாச்சேரியில் உள்ள மண்பாண்டக் கலைஞர்கள் வீட்டுக்குத் தேவையான மண் பானை, மண் சட்டி என மண்பாண்டப் பொருட்கள் உற்பத்தி செய்தோம். சுமார் 1965-ம் ஆண்டிலிருந்து களிமண்ணில் கலைப்பொருட் கள் உருவாக்கி னர். தற்போது களிமண் பொம்மைகள், காகிதக்கூழ் பொம்மைகள், மேலும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மூலம் பொம்மைகள் தயாரித்து வருகிறோம். ஆண்டு முழுவதும் தொடர்ந்து வேலையிருக்கும். ஆண்கள், பெண்கள் என அனைவரும் குடிசைத்தொழிலாக உற்பத்தி செய்து வருகிறோம்.

கடந்தாண்டு கரோனா ஊரடங்கால் தொழில் பாதிக்கப் பட்டது. கடந்தாண்டை விட கொலு பொம்மைகள் விற்பனை உயர்ந்துள்ளது. மேலும் வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஏற்றுமதியாளர்கள் மூலம் விளாச்சேரி பொம்மைகள் வெளிநாடுகளுக்கும் சென்றுள் ளன. ஆண்டுதோறும் புதிதாக ஒரு கொலு பொம்மை அறிமுகம் செய்வது வழக்கம்.

இந்தாண்டு கிராமத் தலைவர் தலைமையில் நடக்கும் பஞ்சாயத்துக் கூட்டம், நவ நரசிம்மர் ஆகிய சிலைகளை அறிமுகப்படுத்தினோம்.

வழக்கம்போல் சரஸ்வதி, லெட்சுமி, விநாயகர் சிலைகள் அதிக எண்ணிக்கையில் விற்பனையானது. மகாத்மா காந்தி, விவேகானந்தர், பாரதியார் ஆகியோரின் சிலைகளும் விற்பனையானது. கடந்தாண்டு 60 சதவீதம்தான் விற்பனையானது. கடந்த ஆண்டைவிட இந்தாண்டு உற்பத்தி குறைவாகத்தான் செய்தோம். அதில் 90 சதவீதம் விற்பனையானதால் மகிழ்ச்சி அடைந்துள்ளோம்,

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in