

மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிக இணைந்துவிட்ட நிலையில் பாமகவிடம் திமுக பேசி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுதொடர்பாக பாமக செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் க.பாலு கூறியதாவது:
அதிமுக, திமுக தவிர அன்புமணி ராமதாஸை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ளும் கட்சிகள் பாமகவுடன் கூட்டணிக்கு வரலாம். எங்கள் நிலைப்பாட்டில் தெளிவாக இருக்கிறோம். திமுக கூட்டணிக்கு விஜயகாந்த் வருவார் என்று பெரிதும் எதிர்ப்பார்த்தனர். அவர் மக்கள் நலக் கூட்டணிக்கு சென்றுவிட்டதால், திமுக பலவீனம் அடைந்துள்ளது. அதனால், யாராவது கூட்டணிக்கு வருவார்களா என்று அலைந்து கொண்டிருக்கிறது. முதல்வர் வேட்பாளராக அன்புமணி ராமதாஸை ஏற்றுக் கொண்டாலும்கூட திமுகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம். லெட்டர் பேட் கட்சிகள்தான் திமுகவுக்கு ஆதரவு தருகின்றன. பதவி ஆசையில் அலையும் திமுக வேண்டுமென்றால் அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு ஆளுக்கு இரண்டரை ஆண்டுகள் என்று ஒப்பந்தத்தை போட்டுக் கொள்ளலாம். இவ்வாறு க.பாலு தெரிவித்தார்.