Last Updated : 10 Oct, 2021 06:40 PM

 

Published : 10 Oct 2021 06:40 PM
Last Updated : 10 Oct 2021 06:40 PM

உள்ளாட்சித் தேர்தலுக்கு ஒட்டுமொத்த எம்எல்ஏக்கள் எதிர்ப்பு; நாளை பந்த்:ஆளுநர் முடிவை எதிர்நோக்கும் கட்சிகள்,மக்கள்

புதுச்சேரி

உள்ளாட்சித்தேர்தலுக்கு ஒட்டுமொத்த எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள சூழலில் முதல்கட்ட தேர்தலுக்கு நாளை மனுதாக்கல் தொடங்கும் சூழலில் எதிர்க்கட்சிகள் பந்த் போராட்டத்தை அறிவித்துள்ளன.

இவ்விவகாரத்தில் ஆளுநர் தமிழிசை முடிவை எதிர்நோக்கி கட்சிகளும், மக்களும் காத்துள்ளனர்.

புதுச்சேரியில் இதுவரை கடந்த 1968 மற்றும் 2006 ஆகிய ஆண்டுகளில் இருமுறை மட்டுமே உள்ளாட்சித்தேர்தல் நடந்துள்ளது. இப்பதவிக்காலம் முடிந்து கடந்த 13.7.2011ல் இருந்து இப்பதவிகள் காலியாகவே உள்ளன. பதவிகாலம் 2011ல் முடிவடைந்து 10 ஆண்டுகளாகியும் இதுவரை அடுத்த தேர்தல் நடத்தவில்லை. பல வழக்குகள் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு இறுதியில் உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி இம்முறை உள்ளாட்சித்தேர்தல் பணிகள் தொடங்கி தேதிகள் அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சுயேச்சை எம்எல்ஏ பிரகாஷ்குமார் உள்ளிட்டோர் மனுதாக்கல் செய்தனர். நீதிமன்ற உத்தரவுபடி முதலாவதாக அறிவிக்கப்பட்ட தேதிகள் ரத்து செய்யப்பட்டன. உள்ளாட்சி தேர்தலில் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது. 2006ம் ஆண்டைப்போல பெண்கள், தாழ்த்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் பெண்களுக்கு வார்டு இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக மூன்று கட்டங்களாக உள்ளாட்சித்தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. பேரவைத்தலைவர் செல்வம் தலைமையில் அனைத்துக்கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று நடந்தது.

அக்கூட்டத்தில், உள்ளாட்சி தேர்தலை பிற்பட்டோர், பழங்குடியினர் இடஒதுக்கீட்டுடன் நடத்துவதுடன், மாநில தேர்தல் ஆணையத்துக்கு கண்டனம் தெரிவித்தும், ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதைத்தொடர்ந்து பேரவைத்தலைவர் செல்வம் தலைமையில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஆளுநர் தமிழிசையை சந்தித்து தீர்மானங்கள் அடங்கிய மனுவையும் அளித்தனர்.

காங்கிரஸ், திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனி்ஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், மதிமுக, புதிய நீதிக்கட்சி மற்றும் கூட்டணி கட்சிகள், அமைப்புகள், இயக்கங்களின் ஆலோசனைக் கூட்டம் காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தின் முடிவில், இடஒதுக்கீடு குளறுபடிகளை சரிசெய்தே உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும். அடிப்படை ஜனநாயகத்தை பறிக்கும் தேர்தல் ஆணையரை நீக்கக்கோரியும் நாளை (திங்கள்கிழமை) முழு அடைப்பு போராட்டம் (பந்த்) நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 2வது முறையாக அறிவிக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல்கட்ட தேர்தல் வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது. புதுவை, உழவர்கரை நகராட்சி தலைவர், கவுன்சிலர்களுக்கு வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. வேட்புமனுதாக்கல் 18ம் தேதி நிறைவடைகிறது. முதல்கட்ட தேர்தல் நவம்பர் 2ம் தேதி நடக்கிறது. அலுவலக நேரத்தில் அந்தந்த பகுதி தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் நேரிலோ, ஆன்லைனிலோ மனு தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த செப்டம்பர் 22ம் தேதி உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது. முதல் கட்ட தேர்தல் மனு தாக்கல் தொடங்கிய தினம் உயர் நீதிமன்றம் தலையிட்டதால் வேட்புமனு தாக்கல் நடைபெறவில்லை. தேர்தல் தள்ளிப்போனது.

தற்போது ஒட்டுமொத்தமாக புதுவை சட்டசபையில் இடம்பெற்றுள்ள எம்எல்ஏக்கள் ஒன்று கூடி ஆளுநரை சந்தித்துள்ளனர். இதனால் உள்ளாட்சி தேர்தல் விவகாரம் தொடர்பாக சட்டவல்லுநர்களை ஆளுநர் தமிழிசை கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பார் என்று தெரிகிறது.

ஆளுநர் முடிவை எதிர்நோக்கி கட்சிகளும், எம்எல்ஏக்களும், போட்டியிட உள்ளோரும், மக்களும் காத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x