

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே தென்னமநல்லூரில் கி.பி 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வில் வீரனின் நடுகல் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கள்ளிக்குடி அருகே தென்னமநல்லூரில் பழமையான சிற்பம் இருப்பதாக க.சிவன் தகவலின்படி மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியரும், பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளருமான து.முனீஸ்வரன் தலைமையில் ஆனந்தகுமரன் , மணிகண்டன், தர்மர், வைகிராஜா ஆகியோர் கள ஆய்வு செய்தனர்.
இதில் புதைந்த நிலையில் கி.பி.15ம் நூற்றாண்டை சேர்ந்த வில் வீரன் சிற்பம் என கண்டறியப்பட்டது.
இது குறித்து உதவி பேராசிரியர் து.முனீஸ்வரன் கூறியதாவது: சங்க காலம் முதல் தமிழரின் பண்பாட்டில் நடுகல் வழிபாட்டுமுறை முக்கிய பங்குண்டு. நடுகல் என்பது போரில் இறந்தவர்களின் நினைவாக வைக்கப்படும் வீரம் பேசும் நினைவுக்கல். அதன்படி தென்னமநல்லூரில் வில் வீரன் நடுகல் சிற்பம் கண்டறியப்பட்டது.
இது 4 அடி உயரம், 2 அடி அகலம் 12 செ.மீ தடிமனுடைய கருங்கல்லில் புடைப்பு சிற்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் வீரனின் இடது கையில் வில், வலது கை இடுப்பில் நீண்ட வாள் உள்ளது.
தலையில் கொண்டை, காதுகளில் காதணி, கழுத்தில் சரபளி சவடி, பதக்க ஆபரணங்கள், மார்பில் போர்வீரர்கள் அணியும் சன்னவீரம் காணப்படுகிறது.
வில் வீரனின் இடுப்பில் சலங்கை, பதக்கம், கை, கால்களில் வீரக்கழலும் அணிந்து முன்னங்காலை ஊன்றி போருக்கு செல்வதுபோல் உள்ளது.
இச்சிற்பத்தை ஆய்வு செய்ததில், இப்பகுதியில் வில் வித்தையில் புகழ் பெற்று இறந்த போர் வீரனின் நினைவாக எழுப்பட்ட நடுகல்லாக இருக்கலாம் .இது கி.பி 15ம் நூற்றாண்டை சேர்ந்தது. தற்போது மக்கள் வேட்டைக்காரன் கோயில் என்று வழிபடுகின்றனர், என்றார்.