

ஜல் ஜீவன் திட்டத்தில் மத்திய அரசு தனது நிதி பங்களிப்பை 75 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றார் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு.
திருச்சி மாநகராட்சியில் ரூ.3.93 கோடியில் புதிதாக வாங்கப்பட்டுள்ள நவீன சாலை சுத்தம் செய்யும் 2 வாகனங்கள் மற்றும் திடக்கழிவுகளை தரம் பிரித்து வாங்கும் பணிக்காக வாங்கப்பட்டுள்ள 100 மின்கல வாகனங்கள் ஆகியவற்றின் பயன்பாட்டை அமைச்சர் கே.என்.நேரு தென்னூர் உழவர் சந்தை அருகே இன்று கொடியசைத்துத் தொடக்கிவைத்தார்.
மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் எம்.பழனியாண்டி (ஸ்ரீரங்கம்), ந.தியாகராஜன் (முசிறி), மாநகராட்சி ஆணையர் ப.மு.நெ.முஜிபுர் ரகுமான், நகரப் பொறியாளர் எஸ்.அமுதவல்லி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.என்.நேரு கூறியது:
”தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் மிகவும் நேர்மையாக நடத்தப்பட்டுள்ளது. தேர்தலில் தோல்வி ஏற்படப்போகிறது என்பதற்காக முறைகேடு நடைபெற்றதாக அதிமுகவினர் குற்றம் சாட்டுகின்றனர்.
ஜல் ஜீவன் திட்டத்தில் மத்திய அரசு தனது நிதி பங்களிப்பை 75 சதவீதமாக உயர்த்த வேண்டும். ஏனெனில், மத்திய அரசு கூறுவதுபோல் மாநில அரசுகள் நிதி ஒதுக்க முடியாது.
அந்தளவுக்கு இந்தியாவின் எந்த மாநில அரசிடமும் நிதி இருக்காது. தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஏற்கெனவே இருந்த அரசு ரூ.5 லட்சத்து 65 ஆயிரம் கோடி கடன் வைத்துவிட்டுச் சென்றுள்ளது.
எனவே, ஜல் ஜீவன் திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமெனில், ஏற்கெனவே இருந்ததுபோல் மத்திய அரசு தனது பங்களிப்பாக 75 சதவீத நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதுதொடர்பாக மத்திய ஜல் சக்தி துறை அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளேன்.
நாட்டின் பிற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் நகர்ப் பகுதி அதிகம். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நகர்ப்புற பகுதி மக்கள் தொகை 48.35 சதவீதம். இப்போது 52 சதவீதமாக இருக்கும். வேலைவாய்ப்பு உட்பட பல்வேறு காரணிகளால் மக்கள் நகர்ப் பகுதிகளை நோக்கி அதிகளவில் வருவதால், இன்னும் 10 ஆண்டுகளில் இது 60 சதவீதமாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் கிராமப்புறங்களுக்கு நேரடி குடிநீர் வசதியை நகராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்தான் மேற்கொள்கிறது.
கிராமப்புற மக்களுக்கு குடிநீர் வழங்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணைக் கட்ட ஜல் ஜீவன் திட்டத்தில் நிதி ஒதுக்குமாறு மத்திய ஜல் சக்தி துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். அவரது உத்தரவின்படி நீரியல் வல்லுநரால் தயாரிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து அனுப்பப்பட்டுள்ளது.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அரசின் நிதி நிலைக்கேற்ப முதல்வர் முடிவு செய்து அறிவிப்பார். ஆனால், தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியை முதல்வர் நிச்சயம் நிறைவேற்றுவார்” என்றார்.