

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேற்று அக்டோபர் 9 ஆம் தேதி நடந்த தேர்தலில் 78.47% வாக்குகள் பதிவாகியுள்ளது.
முன்னதாக தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்பு களுக்கான தேர்தல் மற்றும் இதர 28 மாவட்டங்களில் காலியாக உள்ள 130 ஊரக உள்ளாட்சி பதவி களுக்கான இடைத்தேர்தல் ஆகிய வற்றை மாநில தேர்தல் ஆணையம் கடந்த மாதம் அறிவித்திருந்தது.
மொத்தம் 27 ஆயிரத்து 791 பதவிகளை நிரப்ப இந்த தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது.இத்தேர்தலில் 3,346 பதவி களுக்கான வேட்பாளர்கள் போட்டி யின்றி தேர்வு செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, 24,416 பதவிகளுக்கு மொத்தம் 80,819 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 76 லட்சத்து 60 ஆயிரம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றவர்களாவர்.
கடந்த 6-ம் தேதி 9 மாவட்டங் களில் உள்ள 39 ஒன்றியங்களில், 7,921 வாக்குச்சாவடிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் மொத்தம் 77.43 சதவீதம் பேர் வாக்களித்தனர். அதனைத் தொடர்ந்து 9 மாவட்டங்களில் மீதம் உள்ள 35 ஊராட்சி ஒன்றியங்களில் 62 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப் பினர், 626 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 1,324 ஊராட்சித் தலைவர்கள், 10,329 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள் மற்றும் 28 மாவட்டங்களில் காலியாக உள்ள 130 பதவிகளுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தம் 6,652 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 9ஆம் தேதி நடைபெற்ற 9 மாவட்டங்களுக்கான சாதாரண தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் பதிவான வாக்குகள் மற்றும் 28 மாவட்டங்களில் நடைபெற்ற தற்செயல் தேர்தலின்போது பதிவான வாக்குகளின் இறுதி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, காஞ்சிபுரம்: 72.33%, செங்கல்பட்டு 75.51%, வேலூர்: 81.07%, ராணிப்பேட்டை:82.52%, திருப்பத்தூர்:77.85%, விழுப்புரம்:85.31%, கள்ளக்குறிச்சி:82.59%, திருநெல்வேலி;69.34%, தென்காசி:73.35%. மொத்தம் 78.47% வாக்குகள் பதிவாகியுள்ளன.