

மாநில தேர்தல் ஆணையரை மாற்றி அனுபவம் வாய்ந்தவரை நியமிப்பது தொடர்பான விவகாரத்தில் ஆளுநர் தமிழிசை தலையிட வேண்டும் என்று புதுச்சேரி சட்டப்பேரவை பாஜக தலைவரும் அமைச்சருமான நமச்சிவாயம், மாநிலத்தலைவர் சாமிநாதன் ஆகியோர் கூட்டாக தெரிவித்தனர்.
புதுச்சேரி பாஜக கட்சி தலைமை அலுவலகத்தில் கூட்டாக செய்தியாளர்களிடம் அவர்கள் இன்று கூறியதாவது:
“புதுவை மாநிலத்தில் தேர்தல் ஆணையம் எந்த அரசியல் கட்சிகளின் கூட்டத்தையும் கூட்டவில்லை. சட்டப்பேரவை உறுப்பினர்களை கலந்து ஆலோசிக்கவில்லை. தன்னிச்சையாகவே தேர்தல் தேதியை ஆணையம் அறிவித்துள்ளது.
தீபாவளி, ஆயுதபூஜை, மிலாதுநபி, கல்லறை திருவிழா, நவம்பர் 1 விடுதலை நாள் என பல்வேறு விழாக்கள், முக்கிய நிகழ்வுகள் உள்ள சூழலை கருத்தில் கொள்ளாமல் பண்டிகை காலத்தில் தேர்தலை அறிவித்துள்ளது. விழாக்களை வைத்துக்கொண்டு தேர்தலை நடத்துவது உகந்ததாக இல்லை. 2006 மக்கள் தொகை குறைவாக இருந்தது.
அதன் அடிப்படையிலேயே தற்போது நடத்துவது ஏற்புடையது அல்ல. புதுச்சேரி துணைநிலை ஆளுநர் இதில் தலையிட வேண்டும். எனவே 3 மாதங்களுக்கு தேர்தலை தள்ளி வைக்க வேண்டும்.
உள்ளாட்சி தேர்தல் நடத்தும் ஆணையருக்கு முன் அனுபவம் இல்லை. ஐஎப்எஸ் அதிகாரியால் எப்படி தேர்தல் நடத்த முடியும். அதனால் தான் இதுபோன்ற குளறுபடிகள் நடைபெற்றுள்ளது. அரசியல் கட்சியினர் ஆட்சேபனை தெரிவிக்க தேதி கொடுக்கப்படவில்லை.
இது கண்டனத்திற்கு உரியது. மக்கள் நலனை கருத்தில் கொண்டு அனுபவம் வாய்ந்த தேர்தல் ஆணையரை நியமிக்க வேண்டும். மக்கள் விரும்பக் கூடிய தேர்தலாக இருக்க வேண்டும். தேர்தல் ஆணையர் விரும்பக் கூடிய தேர்தலாக இருக்க வேண்டும்" என்று குறிப்பிட்டனர்.