புதுச்சேரி  மாநில தேர்தல் ஆணையரை நீக்கக்கோரி நாளை முழு அடைப்பு

புதுச்சேரி  மாநில தேர்தல் ஆணையரை நீக்கக்கோரி நாளை முழு அடைப்பு
Updated on
1 min read

புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் குளறுபடிகளுக்கு காரணமாக இருக்கும் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக அரசை கண்டித்தும், தன்னிச்சையாக செயல்படும் மாநில தேர்தல் ஆணையரை நீக்கக்கோரியும் நாளை (அக். 11-ம் தேதி) முழு அடைப்பு நடத்த காங்கிரஸ்-திமுக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸ்-திமுக கூட்டணி கட்சிகள் ஆலோனை கூட்டம் நேற்று(அக். 9) இரவு நடைபெற்றது. காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்துக்கு, மாநிலத் தலைவர் ஏ.வி. சுப்ரமணியன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் திமுக, சிபிஐ, விசிக, மதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கூட்டத்துக்கு பின்னர் ஏ.வி. சுப்ரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘‘புதுச்சேரி மாநிலத்தில் மக்களின் அடிப்படை ஜனநாயகம் மற்றும் அதிகாரத்தை வழங்கக்கூடிய உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டிய முறைகளில் மாபெரும் குளறுபடிகள் நடந்திருக்கின்றன. இது திட்டமிட்டு உருவாக்கப்பட்டது.

குறிப்பாக பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடுகளை பறித்துள்ளனர். இந்த செயலால், புதுச்சேரியை ஆளும் என்.ஆர். காங்கிரஸ் -பாஜக கூட்டணி அரசு பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடி சமூகத்துக்கு எதிராக, சமூக நீதிக்கு எதிராக மாபெரும் துரோகம் செய்திருக்கிறது.

ஆகவே பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடி சமூகத்திற்கான இட ஒதுக்கீடுகளுடன், அதிக காலம் எடுத்துக் கொள்ளாமல், அனைத்து குளறுபடிகளையும் சரிசெய்து, உள்ளாட்சித் தேர்தலை நடத்திட வேண்டும்.

இந்த குளறுபடிகளுக்கு எல்லாம் காரணமாக இருக்கும் என்.ஆர். காங்கிரஸ் -பாஜக அரசை கண்டித்தும், தன்னிச்சையாக செயல்படும் மாநில தேர்தல் ஆணையரை நீக்கக் கோரியும்,புதுச்சேரி மக்களின் அடிப்படை ஜனநாயக அதிகாரத்தை நிலைநாட்டிட கோரியும், வரும் திங்கட்கிழமை (11-ம் தேதி) புதுச்சேரி மாநிலத்தில், முழு அடைப்பு போராட்டத்தை நடத்திட மதச்சார்பற்ற முற்போக்கு அணியின் கட்சிகள் முடிவு செய்திருக்கிறன. இந்த போராட்டத்துக்கு அனைத்து தரப்பு மக்களும் ஆதரவு தருமாறு வேண்டுகிறோம்.’’இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in