தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கையை 70 சதவீதமாக உயர்த்த தீவிர நடவடிக்கை: சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

நரிக்குறவர்களுக்கான கரோனா தடுப்பூசி முகாமை சென்னை மெரினா நீச்சல் குளம் அருகில் நேற்று தொடங்கி வைத்து பார்வையிடுகிறார் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். உடன் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி உள்ளிட்டோர்.படம்: க.ஸ்ரீபரத்
நரிக்குறவர்களுக்கான கரோனா தடுப்பூசி முகாமை சென்னை மெரினா நீச்சல் குளம் அருகில் நேற்று தொடங்கி வைத்து பார்வையிடுகிறார் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். உடன் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி உள்ளிட்டோர்.படம்: க.ஸ்ரீபரத்
Updated on
1 min read

தமிழகத்தில் கரோனா தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கையை 70 சதவீதமாக உயர்த்துவதற்கான பணி தீவிரமாக நடந்து வருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை மெரினா கடற்கரை பகுதியில் இரவில் தங்கும் நரிக்குறவர் சமூக மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்நேற்று நடந்தது. இதை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார். தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு பழங்கள், பிரட் அடங்கிய கூடைகளை வழங்கினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழகத்தில் இதுவரை 5.02 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதில், முதல் தவணை தடுப்பூசியை 65 சதவீதம் பேரும், இரண்டாவது தவணையை 22 சதவீதம் பேரும் போட்டுள்ளனர். 68.56 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டு, தமிழகத்தில் முதல் இடத்தில் சென்னை மாநக ராட்சி உள்ளது.

நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் 4.81 லட்சம் கர்ப்பிணிகள், 3.87 லட்சம் பாலூட்டும் தாய்மார்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதல்முறையாக மாற்றுத் திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு அவர்களது வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடும் திட்டம் சென்னை மாநகராட்சியில் தொடங்கப்பட்டது. இத்திட்டம் மூலம் தமிழகத்தில் 2.32 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சாலைகளில் வசிக்கும் ஆதரவற்றோர், வீடு இல்லாதோர் 2,245 பேர், மனநலம் பாதிக்கப்பட்ட 1,761 பேருக்கும் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

நீலகிரியில் 100 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் பழங்குடியினர் அதிக அளவில் தடுப்பூசி போட்டுள்ளனர். தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கையை 70 சதவீதமாக உயர்த்தும் பணி நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி,துணை ஆணையர் எஸ்.மனிஷ்(சுகாதாரம்), பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் உள்ளிட்டோர் உடன் இருந் தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in