

திருமண உதவி திட்டங்களுக்காக ரூ.378 கோடியே 80 லட்சம் மதிப்பில் 94 ஆயிரத்து 700 தங்க நாணயங்களை கொள்முதல் செய்வதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது.
ஏழைப் பெண்களின் திருமணத்துக்காக சமூகநலத் துறையின் மூலம் 5 வகையான திருமணஉதவித் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அதன்படி, கல்வித் தகுதிக்கு ஏற்ப 8 கிராம் தங்கநாணயத்துடன் ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரம் வரை உதவித் தொகை வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் பயனாளிகளுக்கு வழங்க ரூ.378 கோடியே 80 லட்சம்மதிப்பில் 94 ஆயிரத்து 700 தங்கநாணயங்களை கொள்முதல் செய்ய சமூகநலத் துறை சார்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, சமூகநலத் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘திருமண உதவித் தொகை வழங்கும் திட்டத்தில்ஏற்கெனவே, நிலுவையில் உள்ள விண்ணப்பங்களில் சீனியாரிட்டி அடிப்படையில் தகுதியான பயனாளிகளுக்கு திருமண உதவித் தொகை விரைவில் வழங்கப்பட உள்ளது. அதன்படி, ரூ.378 கோடியே 80 லட்சம்மதிப்பில் 94 ஆயிரத்து 700 தங்கநாணயங்களை கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது. டெண்டர் ஒப்பந்தப் புள்ளிகளை தாக்கல் செய்ய நவ.10 கடைசி நாளாகும். அன்று மாலை டெண்டர் ஒப்பந்தப் புள்ளிகள் இறுதி செய்யப்படும்’’ என்றார்.