

பேரனோடு சேர்ந்து தமிழ் கற்கப்போகிறேன் என்று, சென்னை உயர்நீதிமன்றத்தி்ல் புதிதாக பொறுப்பேற்ற நீதிபதி பரேஷ் ரவிசங்கர் உபாத்யா பெருமிதத்துடன் தெரிவித்தார்.
நாடு முழுவதும் 60-க்கும் மேற்பட்ட உயர் நீதிமன்ற நீதிபதிகளை இடமாற்றம் செய்ய உச்ச நீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்குசமீபத்தில் பரிந்துரை செய்தது. அதன்படி குஜராத் உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாகப் பணியாற்றி வந்த நீதிபதி பரேஷ் ரவிசங்கர் உபாத்யா, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு பணி மாறுதல் செய்யப்பட்டார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில்நீதிபதியாக அவர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி டி.எஸ்.சிவஞானம் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். புதிய நீதிபதி பரேஷ் ரவிசங்கர் உபாத்யாவை அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் வரவேற்றார். இந்த நிகழ்வில் தமி்ழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் மற்றும் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பின்னர் நீதிபதி பரேஷ் ரவிசங்கர் உபாத்யா பேசும்போது, ‘‘பாரம்பரியமிக்க சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவியேற்றது பெருமை அளிக்கிறது. என் மீது உள்ள எதிர்பார்ப்புகளை நிச்சயமாக பூர்த்தி செய்வேன். தமிழகத்தின் குடிமகனாக, மிகப்பெரும் பாரம்பரியம் மற்றும்பழமையான கலாச்சாரம் கொண்டமாநிலத்துக்கு வந்துள்ளேன். நானும், எனது பேரனும் தமிழ் ஆசிரியர் ஒருவர் மூலமாக தமிழ் கற்றுக்கொள்ளப் போகிறோம்.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நீதிபதியாக பதவி வகித்தாலும் இன்றும் மனதளவில் வழக்கறிஞராகத்தான் உள்ளேன். வழக்கறிஞர்கள் ஆஜராகவில்லை என்பதற்காக இதுவரை ஒரு வழக்கைக்கூட நான் தள்ளுபடி செய்தது இல்லை. ஆனால் அதை வழக்கறிஞர்கள் தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொள்ளக்கூடாது’’ என்றார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள நீதிபதி பணியிடங்களின் மொத்த எண்ணிக்கை 75. தற்போது பொறுப்பேற்றுள்ள நீதிபதி பரேஷ்ரவிசங்கர் உபாத்யாவுடன் சேர்த்துஇந்த எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மேலும் 10 புதிய நீதிபதிகளை நியமிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.