

குஜராத் துறைமுகத்தில் ரூ.21 ஆயிரம்கோடி மதிப்பிலான ஹெராயின் சிக்கிய விவகாரத்தில், சென்னையில் கைது செய்யப்பட்ட தம்பதி வீட்டில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
ஈரானின் பண்டார் அப்பாஸ் துறைமுகத்தில் இருந்து, குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்துக்கு வந்தகன்டெய்னரில் 3 ஆயிரம் கிலோஹெராயின் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவை ஆப்கானிஸ்தானில் இருந்து ஈரான் வழியாக இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் சர்வதேச மதிப்பு ரூ.21 ஆயிரம் கோடி. இதுதொடர்பாக மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் விசாரணை நடத்தினர். பின்னர் இந்த வழக்கு என்ஐஏ விசாரணைக்கு மாற்றப்பட்டது.
ஈரானில் இருந்து ஹெராயின் கன்டெய்னர்களை ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த `ஆஷி டிரேடர்ஸ்' என்ற ஷிப்பிங் நிறுவனம் இறக்குமதி செய்திருந்தது. அதன் உரிமையாளர்கள் சுதாகர்-வைசாலி. விஜயவாடாவை சேர்ந்த இந்த தம்பதி, சில ஆண்டுகளாக சென்னை போரூர் அருகேயுள்ள கொளப்பாக்கத்தில் வசித்து வருகின்றனர்.
ஹெராயின் சிக்கியதை தொடர்ந்து இருவரையும் மத்தியவருவாய் புலனாய்வு துறையினர் கைது செய்து, குஜராத்அழைத்துச் சென்று விசாரணை நடத்தி,பின்னர் சிறையில் அடைத்தனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து ஹெராயின் வந்திருப்பதால், சுதாகர்-வைசாலி தம்பதிக்கு தலிபான் அமைப்பினருடன் தொடர்பு இருக்கிறதா என்றும் விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், டெல்லி மற்றும் கேரளாவில் இருந்து வந்த என்ஐஏ அதிகாரிகள் 10-க்கும் மேற்பட்டோர் நேற்று கொளப்பாக்கத்தில் உள்ள சுதாகர்-வைசாலி வீட்டில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
ஏற்கெனவே, தமிழக க்யூ பிரிவு போலீஸார், போதைப்பொருள் தடுப்புபிரிவு போலீஸார் ஆகியோர் அங்குசோதனை நடத்தி, சில ஆதாரங்களை எடுத்துச் சென்றுள்ளனர். அவர்களிடம் இருந்து அந்த ஆதாரங்களை என்ஐஏஅதிகாரிகள் வாங்கியுள்ளனர்.