Published : 10 Oct 2021 03:16 AM
Last Updated : 10 Oct 2021 03:16 AM

மத்திய தொல்லியல் துறை சார்பில் இன்று முதல் ஆதிச்சநல்லூரில் அகழாய்வுப் பணி தொடக்கம்: உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் தொல்லியல் துறை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள்.

தூத்துக்குடி

வைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூரில் இன்று முதல் மத்தியதொல்லியல் துறையின் அகழாய்வுப் பணி தொடங்குகிறது. உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் விரைவில் இங்கு அமைக்கப்படுகிறது.

தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமமான ஆதிச்சநல்லூரில், தமிழக தொல்லியல் துறை சார்பில் சமீபத்தில் இங்கு அகழாய்வுப் பணி நடந்தது. இங்கு கிடைத்தநெல்மணிகள் 3,200 ஆண்டுகளுக்கு முந்தையவை என உறுதிசெய்யப்பட்டதால், தேசிய அகழ்வாராய்ச்சியாளர்கள் மற்றும் வரலாற்று அறிஞர்களை வெகுவாக ஆதிச்சநல்லூர் கவர்ந்துள்ளது.

இதனிடையே, கடந்த 2019மத்திய பட்ஜெட்டில், `ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்தஅருங்காட்சியகம் அமைக்கப்படும்’ என்று, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இதற்கான இடங்கள், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையிலான வருவாய்த் துறையினரால் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

மத்திய தொல்லியல் துறையின் திருச்சி தென்மண்டல கண்காணிப்பாளர் அருண்ராஜ் தலைமையில் ஆய்வாளர்கள், ஆதிச்சநல்லூரில் அகழாய்வுப் பணியை இன்று (10-ம் தேதி) காலை 7 மணிக்கு தொடங்குகின்றனர். இதுகுறித்து, மத்திய அகழாய்வுத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள இரும்புக் கால தொல்லியல் தளமான ஆதிச்சநல்லூரை, தொல்பொருள் தளமாக அபிவிருத்தி செய்யும் முயற்சியின் ஒரு பகுதியாக அகழாய்வு மற்றும் பாதுகாப்புப் பணிகளை இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் விரைவில் மேற்கொள்ள உள்ளது.

மத்திய பட்ஜெட்டில் அறிவித்தபடி, நாட்டில் ‘வரலாற்றுச் சின்னமான தளங்களாக’ உருவாக்கப்படும் 5 தொல்பொருள் தளங்களில் ஆதிச்சநல்லூரும் ஒன்றாகும். தென்னிந்தியாவில் அமையவுள்ள ஒரே தளம் இதுவே. 2004-05-ம் ஆண்டில் ஆதிச்சநல்லூரில் நடந்த அகழ்வாராய்ச்சியின்போது மனித எலும்புக்கூடுகள் மற்றும் தமிழ் பிராமி எழுத்துகள், பானை ஓடுகள் மற்றும் இரும்புக் கால மக்களின் வாழ்விடத் தளத்தின் எச்சங்கள் கிடைத்துள்ளன.

மத்திய தொல்லியல் துறை சென்னை வட்டத்தைப் பிரித்து, புதிதாக திருச்சி நிர்வாக வட்டம், கடந்த ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி உருவாக்கியது. தென் தமிழகத்தின் 160 மத்திய நினைவுச் சின்னங்கள் திருச்சி வட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்திய தொல்லியல் துறையின் திருச்சி வட்டம் ஆதிச்சநல்லூர் அகழாய்வுப் பணியை நாளை (இன்று) தொடங்க உள்ளது.

“ஆதிச்சநல்லூர் கி.மு. 1,000-க்குமுந்தைய நாட்டின் மிகப் பழமையான இரும்புக் கால தளங்களில் ஒன்றாகும். தென்னிந்தியாவிலேயே உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் முதன்முதலாக இங்குதான் அமைக்கப்பட உள்ளது. இங்கு இதுவரை எடுக்கப்பட்ட அனைத்துப் பொருட்களும் அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்படும்.

அத்துடன், அகழாய்வு நடந்த குழிகளின் மேல் கண்ணாடி தரைத்தளம் அமைத்து, அதன் மீது சுற்றுலாப் பயணிகள் நடந்து சென்றுஅகழாய்வு நடந்த பகுதிகளைப் பார்க்கும் வகையில் அருங்காட்சியகம் அமைக்கப்படும். இத்தகையஅமைப்பு ஐரோப்பாவில் உள்ளது”என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x