

மதுரையில் இன்று நடைபெறும் தடுப்பூசி முகாம்களில் கரோனா முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு குலுக்கல் முறையில் வாஷிங்மெஷின், மொபைல் போன், குக்கர், சேலைகள், வேட்டிகள், துண்டுகள் வழங்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் அறிவித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோர் 24.45 லட்சம் பேர் உள்ளனர். இவர்களில் கிராமங்களில் 63 சதவீதம் பேரும், மாநகராட்சி பகுதியில் 55.74 சதவீதம் பேரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் 5-வதுகட்ட தடுப்பூசி முகாம் இன்று நடைபெறுகிறது.மதுரை மாவட்ட கிராமங்களில் தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை 100 சதவீதத்தை எட்டும்வகையில் மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் அறிவுறுத்தலின்பேரில் ஊராட்சி ஒன்றியங்கள், கிராம பஞ்சாயத்துகளில் தடுப்பூசி போட்டால் சைக்கிள், மிக்ஸி, குக்கர் குலுக்கல் முறையில் வழங்குவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் மதுரை மாநகராட்சியிலும் இதேபோன்ற திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து மதுரை மாநகராட்சி ஆணையாளர் கே.பி.கார்த்திகேயன் நேற்று கூறியிருப்பதாவது:
மாநகராட்சி வார்டுகளில் தடுப்பூசி செலுத்திக் கொள்வோருக்கு குலுக்கல் முறையில் முதல் பரிசாக ஒருவருக்கு வாஷிங்மெஷின், 2-வது பரிசாக 2 பேருக்கு மொபைல் போன்கள், 3-வது பரிசாக 10 பேருக்கு குக்கர்கள், சிறப்புப் பரிசாக 30 பேருக்கு சேலைகள், வேட்டி கள், துண்டுகள் ஆகியவைவழங்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.