

நஞ்சில்லா உணவு, விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்ற இயற்கை விவசாயமே சிறந்தது என சாதித்து காட்டிய ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி செந்தமிழ் செல்வன் இந்திய அளவில் சிறந்த விவசாயி என ‘சோனாலிகா பெருநிறுவன சமூக பொறுப்பு’ என்ற நிறுவனம் விருது வழங்கி கவுரவித்துள்ளது.
தமிழர்களின் பழங்கால வேளாண் தொழிலாக நெல், கரும்பு, மிளகு, சிறுதானியங்கள், தென்னை, அவரை, வாழை, பருத்தி, மா போன்ற முதன்மை பயிர்களை இயற்கை வேளாண் முறையில் சாகுபடி செய்து அதில் நல்ல முன்னேற்றத்தையும் கண்டு வந்தனர். காலப்போக்கில் ரசாயன உரங்கள் தலை தூக்கத் தொடங்கியபோது, ரசாயனம் கலந்த உணவுகளை உட்கொள்ள தொடங்கிய நம்மில் பலர் பலவிதமான நோய்களுக்கு ஆளாகினர். இதிலிருந்து நாம் விடுபட பழையபடி இயற்கை வேளாண்மையே சிறந்தது என தமிழக விவசாயிகள் தற்போது பழமையை நோக்கி திரும்ப தொடங்கியுள்ளனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி செந்தமிழ் செல்வன் என்பவர் தனது வீட்டை விற்று லத்தேரி அருகே 3 ஏக்கரில் தரிசு நிலத்தை வாங்கி 2 ஆண்டுகள் போராடி தற்போது அங்கு இயற்கை முறையில் விவசாயம் செய்து, விவசாய தொழிலை லாபகரமான தொழிலாக மாற்றி ‘அறிவுத்தோட்டம்’ என அதற்கு பெயரிட்டு ‘பசுமை புரட்சியை’ ஏற்படுத்தி வருகிறார்.
மேலும் தான் செய்து வரும் இயற்கை விவசாயத்தின் வழிமுறைகளை அனைத்து விவசாயிகளும் பின்பற்ற வேண்டும் என்பதால் மாதந்தோறும் விவசாயிகளுக்கு நேரடி பயிற்சி வகுப்புகள், ஆன்லைன் மூலமாகவும் இயற்கை விவசாயம் சார்ந்த தகவல்களை அவர் பகிர்ந்து வருகிறார்.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் செந்தமிழ் செல்வன் கூறும்போது, "வங்கியில் 35 ஆண்டுகளாக பணியாற்றியுள்ளேன். இது தவிர அறிவொளி இயக்கத்தில் முக்கிய பொறுப்பு வகித்து வருகிறேன். விவசாயம் என்பது லாபகரமான தொழில் என்பதை விவசாயிகள் உணர வேண்டும் என நினைத்தேன். அதற்கு, இயற்கை விவசாயம் சிறந்தது என முடிவு செய்தேன்.
அதனால் நானே விவசாய தொழிலில் இறங்கினேன். வங்கி பணியில் இருந்து விருப்ப ஓய்வுபெற்றேன். எல்லோரும் நிலத்தை விற்று வீட்டை வாங்குவார்கள், நான் குடியிருந்த வீட்டை விற்று 3 ஏக்கரில் நிலத்தை வாங்கினேன். அதில், இயற்கை உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்ய தொடங்கினேன்.
எனது நிலத்தில் சொட்டு நீர் பாசனம், நீர் மேலாண்மை, இயற்கை உரம் ஆகியவை பயன்படுத்தி அதன் மூலம் நல்ல விளைச்சல் பெற்றேன். இயற்கை விவசாயம் மூலம் தற்போது வாழை, மா, தென்னை, கீரை வகைகள், பழத்தோட்டம், பூந்தோட்டம், மூலிகைத்தோட்டம், காய்கறி தோட்டம், நாட்டு கோழி வளர்ப்பு என அனைத்தும் அறிவுத் தோட்டத்தில் செய்து வருகிறோம்.
இங்கு விளையும் காய்கறி, பழ வகைகள் வேலூரில் உள்ள ‘நம் சந்தையில்’ வாரந்தோறும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை முறையில் பயிரிடப்பட்ட உணவுப்பொருட்கள் என்பதால் பொதுமக்களும் ஆர்வமுடன் வாங்கிச்செல்கின்றனர்.
இதேபோல, அனைத்து விவசாயிகளும் இயற்கை விவசாயத்துக்கு மாறினால் நம் எதிர்கால சந்ததியர்களுக்கு நஞ்சில்லா உணவு வகைகளை கொடுப்பதுடன், விவசாய தொழிலையும் லாபகரமான தொழிலாக மாற்ற முடியும். நாம் இயற்கையை நேசிக்க தொடங்கினால், இயற்கையும் நம்மை நேசிக்கும்’’ என்றார்.
இயற்கை விவசாயத்தில் பல சாதனைகளை செந்தமிழ் செல்வன்தொடர்ந்து செய்து வருவதை அறிந்த ‘சோனாலிகா பெரு நிறுவன சமூக பொறுப்பு’ என்ற நிறுவனம் இந்திய அளவில் 15 விவசாயிகளில் ஒருவராக இவரை தேர்வு செய்து சமீபத்தில் அவருக்கு சிறந்த விவசாயி என விருதினை வழங்கி கவுரவித்துள்ளது. இது மட்டுமின்றி இயற்கை விவசாயத்தில் அவர் கையாண்டு வரும் தொழில் நுட்பத்தை புத்தக வடிவில் அச்சிட்டு வடமாநில விவசாயிகளுக்கு அந்நிறுவனம் வழங்கி வருகிறது என்பது குறிப் பிடத்தக்கது.