இனிஷியல் மாற்றத்தால் பணி பறிபோன பெண்ணுக்கு 2 நாட்களில் பணி வழங்க உத்தரவு

இனிஷியல் மாற்றத்தால் பணி பறிபோன பெண்ணுக்கு 2 நாட்களில் பணி வழங்க உத்தரவு
Updated on
1 min read

இனிஷியல் மாற்றத்தால் பறிபோன சத்துணவு அமைப்பாளர் பணியை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 2 நாளில் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தி.மலை மாவட்டத்தில் மதிய உணவு திட்டத்தின் கீழ் காலியாக இருந்த சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் உதவியாளர்கள் பணியிடங்களுக்கு மாவட்ட நிர்வாகம் கடந்த 2008-ம் ஆண்டு அறிவி்ப்பாணை வெளியிட்டது. அதன்படி, கல்லாயி கிராமத்தைச் சேர்ந்த பி.தமி்ழ்செல்வி (26) என்பவர் கடந்த 2008-ம் ஆண்டு கல்லாயி ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் காலியாக இருந்த சத்துணவு அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பித் துள்ளார். அவருக்கு நேர்காணல் நடத்தப்பட்டு கடந்த 2009-ம் ஆண்டு பணி நியமன உத்தரவும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பி.தமி்ழ்செல்வி என்ற தனது இனிஷியலுக்குப் பதிலாக பணி நியமன ஆணையில் எஸ்.தமிழ் செல்வி என இருந்ததால் அதை மாற்றித்தருமாறு பி.தமிழ்செல்வி அதிகாரிகளிடம் கோரியுள்ளார்.

இந்நிலையில் தனக்கான சத்துணவு அமைப்பாளர் வேலையை கல்லாயி கிராமத்தில் இருந்து 2 கிமீ தொலைவில் வசிக்கும் எஸ்.தமிழ்செல்வி(36) என்ற பெண்ணுக்கு அதிகாரிகள் ஆள்மாறாட்டம் செய்து வழங்கியதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பி.தமிழ்செல்வி, அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்த ஆள்மாறாட்டம் தொடர்பாக பி.தமிழ்செல்வி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்யநாதன் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘பி.தமிழ்செல்விக்கு வழங்கப் பட்ட பணிநியமன ஆணையில் எஸ்.தமிழ்செல்வி என இனிஷியல் மாறியுள்ளது. அதைப்பயன்படுத்தி அந்த வேலையை வேறு ஒரு பெண்ணுக்கே அதிகாரிகள் ஆள்மாறாட்டம் செய்து வழங்கியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

சத்துணவு அமைப்பாளர் பணிக்கு உள்ளூரைச் சேர்ந்த தகுதியானவர்கள் இல்லை எனும் போதுதான் பக்கத்து ஊரைச் சேர்ந்தவர்களை நியமிக்க வேண்டும். ஆனால், கல்லாயி கிராமத்தைச் சேர்ந்த பி.தமிழ்செல்வி அந்த பணிக்கு தேர்வு செய்யப்பட்டும், அவருக்கு அந்த வேலையை வழங்காமல் 36 வயதான பக்கத்து ஊரைச் சேர்ந்த எஸ்.தமிழ்செல்விக்கு அதிகாரிகள் வழங்கியிருப்பது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எனவே எஸ்.தமிழ்செல்விக்கு வழங்கப்பட்டுள்ள சட்டவிரோத பணிநியமன உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அவருக்கு எந்தவொரு பணப்பலன்களையும் வழங்கக்கூடாது. எனவே பாதிக்கப்பட்டுள்ள மனுதாரரான பி.தமிழ்செல்விக்கு 2 நாட்களில் அந்த பணியை வழங்க வேண்டும், என உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in