Published : 09 Oct 2021 02:46 PM
Last Updated : 09 Oct 2021 02:46 PM

நான் உயிரோடு இருப்பதற்குக் காரணம் முதல்வர் ஸ்டாலின்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் நெகிழ்ச்சி

முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்: கோப்புப்படம்

சென்னை

நான் உயிரோடு இருப்பதற்குக் காரணம் முதல்வர் மு.க.ஸ்டாலின் என, அமைச்சர் மா.சுப்பிரமணியன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

'ஜெயித்துக் காட்டுவோம் வா' - நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான வழிகாட்டுதல் மற்றும் ஊக்கமளிக்கும் நிகழ்ச்சி இன்று (அக். 09) சென்னை தியாகராய நகரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையேற்று மாணவர்களுக்கு வழிகாட்டுதல் உரையாற்றினார்.

அதன் விவரம்:

"நான் மிகவும் ஏழ்மையான மிக, மிகப் பிற்படுத்தப்பட்ட குடும்பத்தில் பிறந்தேன். பெற்றோர்களால் என்னை 10ஆம் வகுப்பு வரைதான் படிக்க வைக்க முடிந்தது. வறுமையின் காரணமாக, மேலே படிக்க வைக்க முடியவில்லை. ஆனால், நான் படிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டேன்.

சென்னையில் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பி.ஏ. சேர்ந்து படித்தேன். அப்போது எனக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்தனர். அவர்களைப் படிக்க வைக்க வேண்டும். ஓரளவு குடும்பப் பொருளாதார நிலையில் நானும் படித்தேன்.

என் 10 வயது மகனும் அப்போது படித்துக் கொண்டிருந்தான். ஒரு இளங்கலைப் பட்டத்தை எத்தனை ஆண்டுகள் படித்து முடிக்க வேண்டும்? மூன்று ஆண்டுகள்? ஆனால், நான் அந்த இளங்கலைப் பட்டத்தை ஐந்து ஆண்டுகள் கழித்து 1995ஆம் ஆண்டுதான் முடித்தேன்.

அதன்பிறகு, பெங்களூருவில் உள்ள பல்கலைக்கழகத்தில் எல்எல்பி சேர்ந்து, அதை 1999ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் நாள் முடித்தேன். அரசியலில் பல்வேறு பொறுப்புகளில் இருந்தாலும், அதைப் படித்து முடித்தேன். அப்படியில்லாமல், பத்தாம் வகுப்போடு முடிந்தது என்று நினைத்திருந்தால், இன்று என் பெயருக்குப் பின்னால் எல்எல்பி எனப் போட்டுக்கொள்ள முடியாது.

சென்னை மேயராக இருந்திருக்கிறேன். சட்டப்பேரவை உறுப்பினராக இருந்திருக்கிறேன். தற்போது அமைச்சராக இருக்கிறேன். நாளைக்கு இது எல்லாம் இல்லாமல் போனாலும், நான் படித்த அந்தப் படிப்பு வழக்கறிஞர் என்பது என்னோடு மட்டும்தான் இருக்கும். எனது குடும்பத்தில் யாரும் பட்டம் வாங்கியவர்கள் கிடையாது. எனது குடும்பத்தில் நான் மட்டுமே பட்டம் பெற்றுள்ளேன்.

2004ஆம் ஆண்டு மதுரையில் செம்மொழி மாநாட்டு நிகழ்ச்சிக்குச் செல்லும்போது நான் சென்ற கார் விபத்துக்குள்ளாகி, அதில் என்னோடு பயணித்த ஜம்புலிங்கம் என்பவர் இறந்துவிட்டார். எனது கால் ஆறு துண்டுகளாக உடைந்து, மயக்க நிலையில் அனுமதிக்கப்பட்டேன்.

அப்போது, மாநகராட்சி சேர்மேனாக இருந்தேன். அப்போது அனைத்துப் பத்திரிகைகளிலும் மா.சுப்பிரமணியன் கவலைக்கிடம் என்று செய்தி வந்தது. 15 நாள் சுயநினைவற்ற நிலையில் இருந்தேன். இன்றைய முதல்வர் மதுரை கேஎம்சி மருத்துவமனைக்கு விரைந்து நான் உயிர் பிழைக்க உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று மருத்துவர்களிடம் சொல்லி, இன்று நான் உயிரோடு இருப்பதற்குக் காரணமாக அமைந்தவர் மு.க.ஸ்டாலின் ஆவார். அன்று மருத்துவர்கள் சொன்னது நீங்கள் இனிமேல் நடக்க முடியாது. சம்மணமிட்டு உட்கார முடியாது என்று.

படிப்படியாக பல உடற்பயிற்சி, யோகா பயிற்சிகளை மேற்கொண்டு, எந்த மருத்துவர் சம்மணமிட்டு உட்கார முடியாது என்று சொன்னாரோ, அவர்கள் முன்னாலேயே சம்மணமிட்டு உட்கார்ந்து காண்பித்தேன். மருத்துவர் அதிர்ச்சிக்குள்ளானார்.

நான் அவர்களிடத்தில் பயப்படாதீர்கள். பல பயிற்சிகளை மேற்கொண்ட பிறகுதான் இப்படி அமர்கிறேன் என்று சொன்னேன். கடந்த 20 ஆண்டுகளாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன். புதுவையில் மாரத்தான் ஓடினேன். இளைஞர்கள் கலந்துகொண்டு 3 மணிநேரம் 15 நிமிடத்தில் ஓடினார்கள். நான் 2 மணி நேரம் 34 நிமிடத்தில் பந்தய தூரத்தைக் கடந்தேன்.

அப்போது எனக்குள் ஒரு தன்னம்பிக்கை. நம்மாலும் ஓட முடியும் என்று அதிலிருந்து எங்கெங்கெல்லாம் மாரத்தான் நடைபெறுமோ, அந்த நாடுகளையும் தேடி ஓடிக் கொண்டிருக்கிறேன். 25 மாரத்தான் ஓடிய பிறகு, யாராவது 55 வயதில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு மாரத்தான் ஓடியிருக்கிறார்களா? எனப் பார்த்தேன். யாரும் இல்லை. அதனால் நான் இந்திய சாதனை புரிந்தேன். 50 மாரத்தான் ஓடி ஆசிய சாதனை புரிந்தேன். 75 மாரத்தான் ஓடி உலக சாதனை புரிந்தேன். நேற்று எனது 131-வது மாரத்தானை ஓடி முடித்துள்ளேன்.

இப்படி ஓடி முடித்த பிறகு, நான் இளைஞர்களின் உடற்பயிற்சி விழிப்புணர்வுக்காக ஓடுகிறேன் என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறேன். அதனால் நான் எங்கே போனாலும், என்னை பத்துப் பேர் பார்த்து உங்களால்தான் நான் ஓடிக்கொண்டிருக்கிறேன் என்று சொல்வது மகிழ்ச்சிக்குரியதாக இருக்கிறது.

அதுபோல், நான் ஒரு நாள் புனேவில் கிறிஸ்துமஸ் ரன் மாரத்தான் ஓடிக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு வயதானவரும் ஓடிக்கொண்டிருந்தார். அவரை நான் வினவியபோது, நான் கடந்த 7, 8 ஆண்டுகளில் 40 மாரத்தான் ஓடிவிட்டேன். எனது 60 வயதில் நான் 60 மாரத்தானை ஓட வேண்டுமென்ற இலக்கோடு ஓடிக்கொண்டிருக்கிறேன் என்று சொன்னார்.

ஏன் இப்படி ஓடுகிறீர்கள் எனக் கேட்டபோது, சென்னையில் மா.சுப்பிரமணியன் என்பவர் நீரிழிவு நோயாளியாக இருந்தும் 75 மாரத்தானை ஓடி முடித்துள்ளார். அவரது சமூக வலைதளப் பதிவை பார்த்து நானும் ஓடுகிறேன் என்று என்னிடமே சொன்னார்.

அப்போது நான் அவரிடம், நான்தான் அந்த மா.சுப்பிரமணியன் என்று கூறி அவரோடு புகைப்படம் எடுத்துக்கொண்டேன். ஆகையால், மொழி தெரியாத ஒருவருக்குக் கூட நாம் முன்னுதாரணமாக இருந்து கொண்டிருக்கிறோம்.

ஆகையால், தேர்வுகளுக்குப் பிறகு வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நினைத்துவிடக் கூடாது. தேர்வுகளுக்குப் பிறகும் வாழ்க்கை என்பது இருக்கிறது. ஆகையால், வாழ்க்கையில் வெற்றி பெறுவோம் என்பதற்காகத்தான் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது".

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x