Published : 09 Oct 2021 02:38 PM
Last Updated : 09 Oct 2021 02:38 PM

கண்டிப்பாக நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவோம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை

கண்டிப்பாக நீட் தேர்விலிருந்து விலக்கு பெற்று, வெற்றி பெற்றே தீர்வோம் என, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

'ஜெயித்துக் காட்டுவோம் வா' - நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான வழிகாட்டுதல் மற்றும் ஊக்கமளிக்கும் நிகழ்ச்சி இன்று (அக். 09) சென்னை தியாகராய நகரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையேற்று மாணவர்களுக்கு வழிகாட்டுதல் உரையாற்றினார்.

அதன் விவரம்:

"தமிழகத்தில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 971 மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுதினார்கள். இந்தத் தேர்வு எழுதுவதற்கு முன்பே மாணவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் மனநல ஆலோசகர்கள், மனநல மருத்துவர்களால் கவுன்சிலிங் வழங்கப்பட்டது. நீட் தேர்வு எழுதிய மாணவர்களிடம் தொலைபேசி வாயிலாகப் பேசுகிற வாய்ப்பு அலுவலர்களுக்குக் கிடைத்தது. நீட் தேர்வு எழுதிய 15 சதவிகிதம் மாணவர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்றாலும்கூட, மற்ற அனைத்து மாணவர்களுக்கும் கவுன்சிலிங் வழங்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் தேர்வு எழுதிய பிறகும் மன அழுத்தத்தோடுதான் காணப்படுவதாக சுகாதாரத் திட்ட இயக்குநர் உமா குறிப்பிட்டார். மாணவர்கள் தேர்வுகளைக் கண்டு பயப்படாமல் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு 'ஜெயித்துக் காட்டுவோம் வா' என்ற நிகழ்ச்சியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையும், பள்ளிக் கல்வித்துறையும் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்துகிறோம்.

இந்நிகழ்ச்சியில், தற்போது 500 மாணவர்கள் பங்கேற்று நடைபெறுகிறது. பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் ஒளிபரப்பாகும் பள்ளிக் கல்வித் தொலைக்காட்சி, யூடியூப், மருத்துவத் துறையின் யூடியூப், மாணவர்களுக்கு நெட் வசதி போன்றவை, இந்த நீட் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் இந்நிகழ்ச்சியைக் காணுகிற வாய்ப்போடு நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சி பள்ளிக் கல்வித் தொலைக்காட்சியில் வருகிற அக்டோபர் 10, 11 ஆகிய தேதிகளில் மாலை 3 மணிக்கு மீண்டும் ஒளிபரப்பப்படுகிறது.

திமுகவின் தேர்தல் அறிக்கையில், ஆட்சிக்கு வந்த பிறகு முதல் கூட்டத்தொடரிலேயே நீட் தேர்வை ரத்து செய்வதற்கான தீர்மானம் நிறைவேற்றி, சட்ட முன்வடிவு தயாரிக்கப்பட்டு, அவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அறிவிக்கப்பட்டதைப் போலவே முதல்வர் சட்டப்பேரவை முதல் கூட்டத்தொடரிலேயே நீட் தேர்வுக்கு எதிரான சட்ட முன்வடிவைத் தயாரித்து, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

2006ஆம் ஆண்டு கருணாநிதி முதல்வராக இருந்தபோது, அனந்தகிருஷ்ணன் தலைமையில் ஒரு குழு அமைத்து, நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, நீதிமன்றம் சென்று நீட் தேர்வுக்கு எதிராக விலக்குப் பெற்றுத் தந்தார்கள். அதேபோல, இப்போது முதல்வர், நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு குழு அமைத்து, அது 84 ஆயிரம் பேரிடம் கருத்துகளைக் கேட்டுப் பெற்று, சட்ட முன்வடிவு தயாரிக்கப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அனுப்பி வைக்கப்பட்டதோடு நில்லாமல், முதல்வர் இந்தியாவில் உள்ள 12 மாநில முதல்வர்களுக்கும் 84 ஆயிரம் பேரிடம் பெறப்பட்ட கருத்துகளை அனுப்பி, நீட் தேர்வுக்கு எதிராக நீங்கள் மத்திய அரசிடம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

அதோடு மட்டுமல்லாமல், தமிழ், ஆங்கிலம் தவிர்த்து 7 மாநில மொழிகளில் ஏ.கே.ராஜன் அறிக்கையை மொழிபெயர்த்து, அதுவும் நேற்று மருத்துவத் துறையின் சார்பில் தயாரிக்கப்பட்டு, அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இப்படி நீட் தேர்வுக்கு எதிராகப் பல்வேறு முயற்சிகளை முதல்வர் மேற்கொண்டு வருகிறார். கண்டிப்பாக நீட் தேர்விலிருந்து விலக்கு பெற்று, வெற்றி பெற்றே தீர்வோம்".

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x