

பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை ஒன்றியத்திற்குட்பட்ட திவான்சாபுதூர் ஊராட்சியில் 12 மணி நிலவரப்படி 50.3 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தென் குமாரபாளையம் ஊராட்சியில் பகல் 12 மணி நிலவரப்படி 51 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
கோவை மாவட்டம் ஆனைமலை ஒன்றியத்துக்குட்பட்ட திவான்சாபுதூர் ஊராட்சி மன்ற இடைத்தேர்தலில் இன்று வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 8 ஆயிரத்து 556 வாக்காளர்களைக் கொண்ட இந்த ஊராட்சியில் 12 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது.
கிராம மக்கள் ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர். வாக்குச் சாவடி மையங்களில் நுழைவுவாயில் முன்பு வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு உடல் வெப்பப் பரிசோதனை செய்யப்பட்டு கையுறை, சானிடைசர் அளிக்கப்படுகிறது . முகக் கவசம் அணியாமல் வரும் வாக்காளர்களுக்கு முகக்கவசங்கள் வழங்கப்பட்டு வருகின்றனர்.
வாக்குச் சீட்டு முறை என்பதால் கல்லூரி மாணவ- மாணவிகளும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதிமுக - திமுக கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் நேரடியாக மோதுவதால் அசம்பாவிதச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இங்கு 12 மணி நிலவரப்படி 50.3 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தென் குமாரபாளையம் ஊராட்சியில் பகல் 12 மணி நிலவரப்படி 51 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
தற்போது இந்தப் பகுதியில் மழை பெய்து வரும் காரணத்தினால், மழையையும் பொருட்படுத்தாமல் கிராம மக்கள் ஆர்வத்துடன் வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர்.