Published : 09 Oct 2021 01:31 PM
Last Updated : 09 Oct 2021 01:31 PM

மீனவர்களின் வாழ்வாதாரத்தை அரசு காக்க வேண்டும்: மக்கள் நீதி மய்யம்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்: கோப்புப்படம்

சென்னை

மீனவர்களின் வாழ்வாதாரத்தை அரசு காக்க வேண்டும் என, மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக, அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் தங்கவேலு இன்று (அக். 09) வெளியிட்ட அறிக்கை:

"கானகம் பழங்குடியினர் உலகம்போல், கடல்தான் மீனவர்கள் உலகம். அந்தக் கடலில் அண்டை நாட்டு எல்லைப் பிரச்சினை, மீன்பிடி விதிமுறைகள் என, பல இன்னல்களுடன் மீனவர்கள் போராடி தொழில் செய்துவரும் வேளையில், நாகை மாவட்டம் நாகூர் பட்டினச்சேரியைச் சேர்ந்த ஐய்யப்பன் என்பவர் தன் விசைப்படகில், சகமீனவர்கள் 11 பேருடன் 30.09.21 அன்று இரவு கொச்சின் கடலோரப் பகுதியில் மீன் பிடிக்கச் சென்றபோது ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக, விசைப்படகு கவிழ்ந்து வலையும் ஆட்களும் கடலில் சிக்கிக்கொண்டனர்.

கடலில் சிக்கிகொண்ட 11 மீனவர்கள், கொச்சி கடலோரக் காவல் படையினர் மூலம் மீட்கப்பட்டனர். அதேநேரம், 80 லட்சம் ரூபாய் மதிப்புடைய ஐயப்பனின் விசைப்படகும், 40 லட்சம் ரூபாய் மதிப்புடைய வலையும் கடலிலேயே சிக்கிக்கொண்டன. அவற்றை கடல் நீரோட்டம் இழுத்துச் செல்லும் அபாயம் உள்ளது. படகும் வலையும் பறிப்போனால் அந்த மீனவரின் வாழ்வாதாரம் பறிபோய்விடும் நிலையுள்ளது.

ஆகவே, அவற்றை மீட்பதற்கான நடவடிக்கைகளை கேரள அரசின் கொச்சி துறைமுகப் பிரிவினர் வெகுவிரைவாக எடுக்க வேண்டும். இதை, தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். மேலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய தமிழக மீனவப் பெருமக்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும் வகையில் விசைப்படகு மற்றும் வலைக்கான சேதாரத் தொகையை வழங்கிடவும் தமிழக அரசு விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென மக்கள் நீதி மய்யம் கோரிக்கை வைக்கிறது".

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x