நாளை மெகா தடுப்பூசி முகாம்; இதுவரை இல்லாத அளவுக்கு அதிக மக்கள் பயன்பெறுவர்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் நாளை நடைபெறும் ஐந்தாவது மெகா தடுப்பூசி முகாம், இதுவரை இல்லாத அளவுக்கு அதிக நபர்கள் பயன்பெறும் முகாமாக அமையும் என, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
பெருநகர சென்னை மாநகராட்சி., தேனாம்பேட்டை மண்டலம், மெரினா கடற்கரை பகுதியில் இரவு நேரங்களில் தங்கும் நரிக்குறவ சமூக மக்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (அக். 09) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், இந்த முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட நரிகுறவ சமூக மக்களுக்கு அமைச்சர் பழங்கள் மற்றும் பிரட் அடங்கிய கூடைகளை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து, அமைச்சர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாவது:
"முதல்வரின் ஆலோசனையின்படி, தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் அனைத்து நிலைகளிலும் வேகமாக நடைபெற்று வருகிறது. நேற்று 08.09.2021 இரவு வரை மொத்தம் 5 கோடியே 02 லட்சத்து 54 ஆயிரத்து 633 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.
முதல் தவணை தடுப்பூசியை 65 சதவீதம் பேரும், இரண்டாவது தவணையை 22 சதவீதம் பேரும் செலுத்திக் கொண்டுள்ளனர்.
சென்னை மாநகராட்சியில் இதுவரை 68 லட்சத்து 56 ஆயிரத்து 278 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 83% பேர் முதல் தவணையும், 40% பேர் இரண்டாம் தவணையும் செலுத்தி உள்ளனர். தடுப்பூசி செலுத்திக் கொண்டதில் சென்னை மாநகராட்சி தமிழகத்திலேயே முதல் இடத்தில் உள்ளது.
அனைத்துத் தரப்பினருக்கும் தடுப்பூசி என்ற அடிப்படையில் முதல்வரின் அறிவுரைப்படி பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவிலேயே அதிகமாக 4 லட்சத்து 80 ஆயிரத்து 875 கர்ப்பிணி தாய்மார்களுக்கு தமிழகத்தில் தான் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பாலூட்டும் தாய்மார்களில் 3 லட்சத்து 87 ஆயிரத்து 27 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே சென்னை மாநகராட்சியில் தான் முதன்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கும், 80 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கும் நேரடியாக சென்று தடுப்பூசி செலுத்தும் வகையில் சிறப்பு திட்டம் தொடங்கப்பட்டது. அதன் மூலம், தமிழகத்தில் மொத்தம் 2 லட்சத்து 31 ஆயிரத்து 515 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
சாலைகளில் வசிக்கும் ஆதரவற்ற மற்றும் வீடற்றோர் 2,245 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மனநலம் பாதிக்கப்பட்ட 1,761 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. மேலும், தடுப்பூசி செலுத்துவதன் சிறப்பு நடவடிக்கையாக சென்னை மெரினா கடற்கரையில் இரவில் தங்கும் நரிக்குறவர் சமூக மக்களுக்கு இன்று தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
தமிழகத்தில் தான் பழங்குடியினர் அதிகம் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். நீலகிரியில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். அதேபோல, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் பழகுடியினர் அதிக அளவில் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.
நாளை (அக். 10 அன்று), 5-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. கோவிட் தடுப்பூசி செலுத்துவதன் அவசியம் குறித்த பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. இதுவரை இல்லாத வகையில், அதிகம் பேர் பயன்பெறும் முகாமாக நாளை நடைபெறும் முகாம் இருக்கும். மக்கள் அவர்களது வீட்டின் அருகிலேயே நடக்கும் முகாம்களில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் மொத்தமாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் எண்ணிக்கையை 70 சதவீதமாக விரைவில் உயர்த்தும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன".
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
