Published : 09 Oct 2021 03:10 AM
Last Updated : 09 Oct 2021 03:10 AM

மத்திய அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதை கண்காணிக்க முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஒருங்கிணைப்பு குழு

சென்னை

தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதைக் கண்காணிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநிலஅளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஊரக வளர்ச்சித் துறை செயலர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மத்திய அரசின் திட்டங்கள்மாவட்ட அளவில் நடைமுறைப்படுத்தப்படுவதைக் கண்காணிக்க, மத்திய அரசின் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, முதல்வரை தலைவராக கொண்டு மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும்கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக் குழுவில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் துணைத்தலைவராகவும், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை செயலர் உறுப்பினர் - செயலராகவும் உள்ள னர்.

மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், ஆ.ராசா, எம்.செல்வராஜ், பி.ஆர்.நடராஜன், சு.திருநாவுக்கரசர், திருமாவளவன், பி.ரவீந்திரநாத் குமார், கே.நவாஸ்கனி, மாநிலங்களவை உறுப்பினர்கள் திருச்சி சிவா, ஆர்.எஸ்.பாரதி, எ.நவநீதகிருஷ்ணன் மற்றும் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், மாநில அரசால் பரிந்துரைக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன், நா.எழிலன், டி.கே.ஜி.நீலமேகம், மு.பூமிநாதன், ஜெஎம்எச்.அசன் மவுலானா, கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் குழுவின் உறுப்பினர்களாக உள்ளனர்.

மேலும், பல்வேறு அரசுத்துறை செயலர்கள், துறைத் தலைவர்கள், அரசு சாரா தொண்டு நிறுவனபிரதிநிதிகள், மாநில அளவிலான வங்கியாளர் குழுவின் மேலாண்மை இயக்குநர் ஆகியோரும் உறுப்பினர்களாக உள்ளனர்.

மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்புக் குழுமற்றும் கண்காணிப்புக் குழுக்களில் எடுக்கப்பட்ட முடிவுகளைப் பொறுத்து திட்டங்கள் செயல்படுத்தப்படும் நிலையை மதிப்பாய்வு செய்தல், பல்வேறு வளர்ச்சித்திட்டங்களை செயல்படுத்துவதில் மாநில அரசால் ஈடுபடுத்தப்பட்டுள்ள மனித வளங்களின் செயல்திறனை வரிசைப்படுத்தி மதிப்பாய்வு செய்தல், வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதில் உள்ள தடைகளை நிவர்த்தி செய்து அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களின் வடிவமைப்புகளை மேம்படுத்த அல்லதுநடுநிலைப்படுத்த உரிய திருத்தங்களைச் செய்ய பரிந்துரைகளை வழங்குதல் ஆகியன இக்குழுவின் பணிகளாகும்.

மேலும், வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதற்காக நிதி நிலைமையை மதிப்பாய்வு செய்தல், பல்வேறு திட்டங்களை சரியான நேரத்தில் செயல்படுத்துவதில் உள்ள தடைகளை மறு ஆய்வுசெய்தல், திட்டங்களை செயல்படுத்துவதில் பெறப்பட்ட புகார்கள், முறைகேடுகள், பயனாளிகளின் தவறான தேர்வு, முறைகேடான நிதி,திசைதிருப்புதல் போன்ற புகார்களை பின்தொடர்ந்து நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தல் ஆகிய பணிகளையும் இக்குழு மேற்கொள்ளும்.

பல்வேறு திட்டங்களின்கீழ் அடையாளம் காணப்பட்ட பயனாளிகளின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு நிதி உதவி வழங்குவது குறித்து உரிய வழிகாட்டுதல்களை வழங்குதல், மத்திய துறை திட்டங்கள், சம்பந்தப்பட்ட மத்திய நிறுவனங்கள் முறையாக செயல்படுத்துவதில் உள்ள சிக்கல்களை அடையாளம் காணுதல், மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின்கீழ் கண்காணிக்கப்படும் திட்டங்கள் தொடர்பான நிகழ்வுகளை மத்திய வளர்ச்சி அமைச்சகத்தின் பார்வைக்கு கொண்டு செல்லுதல் உள்ளிட்ட பணிகளையும் இந்தக் குழு மேற்கொள்ளும்.

இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x