மின்வெட்டு ஏற்படாமல் தடுக்க வேண்டும் தமிழகத்துக்கான நிலக்கரியை உறுதிசெய்யுங்கள்: முதல்வருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கோரிக்கை

மின்வெட்டு ஏற்படாமல் தடுக்க வேண்டும் தமிழகத்துக்கான நிலக்கரியை உறுதிசெய்யுங்கள்: முதல்வருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கோரிக்கை
Updated on
1 min read

தமிழகத்தில் நிலவும் நிலக்கரி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண ஒடிசாவின் சந்திரபிலா நிலக்கரி தொகுதியில் இருந்து நிலக்கரி எடுப்பதற்கான அனுமதியை பெற மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் அழுத்தம் தர வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

உலக அளவில் நிலக்கரிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் உள்ள அனல்மின் நிலையங்களில் 4 நாட்களுக்கான நிலக்கரி மட்டுமே கையிருப்பில் உள்ளதாகவும் கடந்த செப்டம்பர் மாதம் முதல் இந்திய நிலக்கரி நிறுவனத்திடம் இருந்து பெறப்படும் அளவு குறைந்து வருவதாகவும், தமிழகத்தின் தினசரி நிலக்கரி தேவை 62 ஆயிரம் டன் என்ற நிலையில், 60 சதவீத நிலக்கரிதான் தமிழகத்துக்கு அனுப்பப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலைமை நீடித்தால் தமிழகத்தில் ஆங்காங்கே மின்வெட்டு வரக்கூடிய சூழல் ஏற்பட்டு, மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதுடன், இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிற தமிழகத்தின் பொருளாதாரமும் வீழ்ச்சியடையும் நிலை ஏற்படும். இதை தடுக்க வேண்டிய கடமை, பொறுப்பு மாநில அரசுக்கு உண்டு.

எனவே, முதல்வர் இந்த பிரச்சினையில் தனி கவனம் செலுத்தி, மத்திய அரசின் நிலக்கரித் துறை அமைச்சரை தொடர்பு கொண்டு, தமிழகத்துக்கு தேவையான நிலக்கரி விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும்.

இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் ஒடிசா மாநிலம் சந்திரபிலா நிலக்கரி தொகுதியில் இருந்து நிலக்கரி எடுக்க மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத்துக்கான அமைச்சகத்தின் அனுமதியை பெற தேவையான அழுத்தத்தை மத்திய அரசுக்கு அளித்து அங்கு மேம்பாட்டுப் பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in