Published : 09 Oct 2021 03:10 AM
Last Updated : 09 Oct 2021 03:10 AM

தலைவர்கள், பத்திரிகையாளர்கள் மீது அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட 52 அவதூறு வழக்குகள் ரத்து

அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் மீதான 52 அவதூறு வழக்குகளை ரத்து செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2011-21 அதிமுக ஆட்சியின்போது, முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, பழனிசாமி மற்றும் அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து விமர்சித்ததாகவும், இதுதொடர்பாக பிற அரசியல் கட்சியினரின் கருத்துகளை பிரசுரம் செய்ததாகவும் நாளிதழ்கள், ஊடகங்களுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் பல்வேறு அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன.

தங்கள் மீது போடப்பட்ட 52 அவதூறு வழக்குகளை ரத்து செய்யக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள்மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நாஞ்சில் சம்பத், ‘நக்கீரன்’கோபால், அறப்போர் இயக்கம் ஜெயராம் வெங்கடேஷ், ‘முரசொலி’ செல்வம், ‘தி இந்து’ சித்தார்த் வரதராஜன், பத்மநாபன், டைம்ஸ் ஆஃப் இந்தியா சுனில் நாயர், கார்த்திகேயன், ஹேமலதா, ‘நவீன நெற்றிக்கண்’ ஏ.எஸ்.மணி,‘தினகரன்’ ஆர்எம்ஆர் ரமேஷ், எகனாமிக் டைம்ஸ் வசுதா வேணுகோபால் ஆகியோர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.

இந்த நிலையில், முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதும், கடந்த அதிமுக ஆட்சியில் அரசியல் தலைவர்கள், ஊடகங்கள், பத்திரிகையாளர்கள் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகள் திரும்பபெறப்படும் என்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி ஆர்.செல்வக்குமார் முன்புஇந்த வழக்குகள் நேற்று விசாரணைக்கு வந்தன.

அரசாணை தாக்கல்

அப்போது, அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் மீதான 52 அவதூறு வழக்குகளை திரும்பபெறுவதற்கான அரசாணையை சென்னை பெருநகர தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன் தாக்கல் செய்தார்.

அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த 52 வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, மறைந்த ‘தினமலர்’ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்குகள் ஏற்கெனவே முடித்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x